மதுரை :
கணவரை உதறிவிட்டு கள்ளக்காதலுடன் அடிக்கடி பெண் மாயமானதால் அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க மதுரை
ஐகோர்ட் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர், மதுரை ஐ கோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறி யிருந்ததாவது:-
நானும் மதுரையை சேர்ந்த பெண்ணும் காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் என் மனைவிக்கு அஜித் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது.
குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவருடன் சென்றுவிட்டார். இது குறித்த புகாரின்பேரில், போலீசார், குழந்தைகளையும், மனைவியை மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர்.
இதனால், நாங்கள் சொந்த ஊருக்கு வந்து விட்டோம். ஆனாலும் அஜித், என் மனைவி கட்டாயப்படுத்தி பேசி வந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் குழந்தைகளுடன் மாயமாகிவிட்டனர். அவர்களை கண்டுபிடித்து ஆஜர்
படுத்தவும், எனது குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் நீதிபதிகள் முன்பாக காவல்துறையினர் ஆஜர் படுத்தினர்.
பின்னர் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரரின் மனைவியின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றன. அவர் அடிக்கடி இதுபோல மனுதாரரை விட்டு விட்டு குழந்தைகளுடன் மாயமாகி விடுகிறார்.
எனவே, குழந்தைகளை மனுதாரரிடம் ஒப்படைப்பது தான் பாதுகாப்பானது என, தெரிவித்தார். இதைக் கேட்டதும், அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார், அப்போது அவரிடம் நீதிபதிகள், உங்களது செயல்பாடு சட்ட விரோதமானது.
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டவராக நீங்கள் செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், சட்டப்படி குழந்தைகளை வளர்ப்பது யார் என்பதை கீழ் கோர்ட்டை அணுகி பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
அதுவரை குழந்தைகளை அவர்களின் தந்தையான மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தி இந்த வழக்கை முடித்து வைத்தனர். அதன்படி இரண்டு குழந்தைகளையும் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனால் அந்த பெண் கோர்ட் வளாகத்தில் கதறி அழுது புரண்டார். இச்சம்பவம், அங்கிருந்தவர்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.