Close
டிசம்பர் 12, 2024 7:50 மணி

குவைத் நாட்டு வங்கியில் கடன் வாங்கி ரூ.700 கோடி மோசடி : கேரளாவில் தீவிர விசாரணை..!

வளைகுடா வங்கி-குவைத் -கோப்பு படம்

குவைத் நாட்டில் உள்ள வங்கியில் ரூ.700 கோடி வரை மோசடி நடந்துளளது கண்டுபிடிக்கப்பட்டுளளது. அது தொடர்பாக கேரளாவில் 1400 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குவைத் சுகாதார அமைச்சகத்தில் நர்ஸ்களாக கேரளாவை சேர்ந்தவர்கள் ஏராளமாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கூடுதல் பணம் தேவைப்படும்போது அவர்கள் பெறும் சுகாதார அமைச்சகத்தின் சம்பள பட்டியல் ஆதாரத்தை கொடுத்து குவைத் நாட்டில் உள்ள வளைகுடா வங்கியில் கடன் வாங்கிக் கொள்வது வழக்கம்.

தொடக்க காலத்தில் சிறு சிறு கடன்களை வாங்கி அதை குறிப்பிட்ட தேதிகளில் சரியாக திரும்பிச் செலுத்தி வங்கியுடனான நம்பிக்கையை பெற்றுள்ளனர். அந்த நம்பிக்கையை ஆதாரமாக வைத்து பெரிய தொகையை கடனாக வாங்கிவிட்டு திரும்பிச் செலுத்தாமல் தப்பி வந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இந்த மோசடி கடன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கியில் கடன் வாங்கியவர்களின் விவரப்பட்டியல் உள்ளது. அதன் அடிப்படையில் வளைகுடா வங்கியின் துணைப் பொது மேலாளர் கேரளா வந்து, சட்டம் ஒழுங்கு பொறுப்பு ஏ.டி.ஜி.,பியிடம் புகார் அளித்தார்.

கடன் வாங்கியவர்களின் விவரப்பட்டியல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வளைகுடா வங்கி சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு தலைமறைவானவர்களிடம் கேரளாவில் விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்டமாக 1400 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிகப்பெரிய அளவிலான மோசடி என்பதால் இதற்குப் பின்னால் நன்கு திட்டமிட்ட சதி இருக்கலாமோ என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top