மக்கள் நல திட்ட பணிகள் மற்றும் கோரிக்கைகளை குறித்த காலத்தில் நிறைவேற்றித் தர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு அரசு அலுவலர்களுக்கு காஞ்சிபுரத்தில் அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், இன்று மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக் குழுவானது ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மக்கள் நல்வாழ்வு துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் துறை, கல்வித் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சாரத் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளில் ஒன்றிய அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெறுகின்றதா என்பதை ஆய்வு செய்யும்.
மேலும் பல்வேறு துறைகள் பணிகள் நிலை குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அதற்கான விளக்கம் அளித்தனர்.
இறுதியாக அரசு அலுவலர்களுக்கு பொதுமக்கள் நல திட்ட பணிகளை உரிய காலத்தில் முடிக்கவும் , எந்தவித தவறுகள் நடக்காமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், மேயர் மகாலட்சுமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் , பல்துறை அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.