Close
டிசம்பர் 12, 2024 12:40 மணி

ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய்..!

வனப்பகுதியில் விடப்பட்ட மரநாய்கள்

ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் மூன்று குட்டிகளுடன் வசித்த மரநாய். தீயணைப்புத்துறை வீரர்களால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள மருதம்புத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் ஆய்வகமும் அமைந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியை ஆய்வகத்தை பார்வையிட சென்ற பொழுது ஆய்வகத்தினுள் மரநாய் ஒன்று தனது மூன்று குட்டிகளுடன் வாழ்ந்து வந்ததைக் கண்டார்.

இது குறித்து தலைமை ஆசிரியை உடனடியாக ஆலங்குளம் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில் நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து அரசு பள்ளியின் ஆய்வகத்தில் வசித்து வந்த மரநாய் மற்றும் அதன் மூன்று குட்டிகளையும் தீவிரமாக தேடினர்.

ஆய்வகத்தினுள் அங்கும் இங்குமாய் போக்குக் காட்டி வந்த மர நாய்களை தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக பிடித்தனர். பின்னர் ஆலங்குளம் அருகே உள்ள வனப்பகுதியில் மரநாய் மற்றும் அதன் குட்டிகள் அனைத்தும் பத்திரமாக விடப்பட்டன. வனப்பகுதியில் விடப்பட்ட மரநாய் மற்றும் அதன் குட்டிகள் உற்சாகமாக துள்ளிக் குதித்து வனப்பகுதியை நோக்கிச் சென்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top