சோழவந்தான்:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, கச்சைகட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையூர் கிராமம். இந்த கிராமம் குட்லாடம்பட்டி அருவிக்கு கீழே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில் இந்த கிராமம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி, ஒன்றியத்துக்கு இடையில் கச்சைகட்டி மற்றும் மேட்டுப்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளின் எல்லையில் அமைந்துள்ளதால் அரசு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மொபைல் டவர் வசதி இல்லாததால், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் அழைப்பது, அவசியத் தேவைகளுக்கு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும், உறவினர்களின் மரண செய்தியை அறிந்து கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகவும்,
அவசரத்திற்கு ஆட்டோ மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஆகியவற்றுக்கு போன் செய்யகூட முடியவில்லை என்றும், இதனால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள வாடிப்பட்டி பாலமேடு மெயின் ரோட்டிற்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் மலை கிராமமாக இருப்பதால் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரவில்லை. முறையான குடிநீர் வசதி இல்லை, சாலை வசதி இல்லை. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறோம் என்று கூறுகின்றனர்.
மொபைல் டவர் வசதி இல்லாததால் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் கை கைரேகை விழாமல் பொருட்கள் வாங்க முடியாமல், சிரமப்படுகிறோம். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வழங்கும் சம்பளப் பணத்தையும் எங்களால் பெற முடியவில்லை.
பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளை முறையாக படிக்க முடியவில்லை. அரசு அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மொபைல் டவர் வசதி இல்லாததால், தங்களின்
பணி சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய முடியவில்லை.
இது குறித்து, பலமுறை வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும் வாடிப்பட்டி அலங்காநல்லூர் யூனியன் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சட்டமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டு வந்த வெங்கடேசன் எம் .எல் .ஏ. வெற்றி பெற்றவுடன் அனைத்து வசதிகளும் செய்து
தரப்படும் என்று கூறச் சென்றார்.
ஆனால் வெற்றி பெற்று நான்கு ஆண்டுகள் ஆகியும் எங்கள் கிராமத்திற்கு இதுவரை வரவில்லை. ஆகையால் உடனடியாக எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான மொபைல் போன் டவர் மற்றும் குடிநீர், சாலை போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையென்றால் , மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்
சாலையில் சாலை மறியல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என கூறுகின்றனர்.
வாடிப்பட்டியில் இருந்து இந்த கிராமத்திற்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் மொபைல் போன் டவர் சிக்னல் கிடைக்காததால், உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். புதிதாக வருபவர்களும் தகவல் தொடர்பு இல்லாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆகையால், உடனடியாக இந்த கிராமத்திற்கு மொபைல் போன் டவர் அமைத்து சிக்னல் கோளாறுகளை சரி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.