நாமக்கல்:
காவிரியை தூய்மைப்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.3,090.75 கோடி நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, மத்திய அமைச்சரிடம், நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக எம்.பி. மாதேஸ்வரன், டில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பட்டீலை நேரில் சந்தித்து, அவரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக துணிகளுக்கு சாயமிடும் தொழில் உள்ளது. சாயப்பட்டறைகளால் காவிரி நிதி பாழ்பட்டு குடிநீர் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காகவும், மத்திய ஜல்சக்தி துறை மூலம் ரூ. 3,090.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்த மார்ச் மாதம் தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜல்சக்தி துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, நாமக்கல் மாவட்டத்தில், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ரூ. 3,090.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.