பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் சுபாஷ் அதுல் தற்கொலை செய்துகொள்வதற்கு முன், பிரிந்து சென்ற தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணத்துக்காக அடிக்கடி துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், விவாகரத்து வழக்கில் நீதித்துறை மனைவிக்கு சாதகமாக செயல்படுவதாகவும் தனது 24 பக்க தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது விவாதப்பொருளாக மாறி வலைதளங்களில் #Mentoo பிரசாரம் வலுவடைந்துள்ளது. இதற்கிடையே தான் விவாகரத்து வழக்குகளில் ஜீவனாம்ச தொகையை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் 8 வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிரசன்னா பி வரலே அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்து தம்பதிகள் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கில் இறுதி ஜீவனாம்சத் தொகையை தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அது கீழ்வருமாறு :-
1. கணவன் மற்றும் மனைவியின் சமூக மற்றும் பொருளாதார நிலை
2. மனைவி மற்றும் குழந்தைகளின் நியாயமான எதிர்கால தேவைகள்.
3. கணவன், மனைவியின் தனிப்பட்ட தகுதிகள் மற்றும் அவர்கள் பார்க்கும் வேலை.
4. கணவரின் வருமானம் மற்றும் அவருக்கு உள்ள சொத்துக்கள்
5. கணவன் வீட்டில் மனைவி அனுபவிக்கும் வாழ்க்கைத் தரம்.
6. குடும்பப் பொறுப்புகளை கவனிப்பதற்காக மனைவியை வேலையை விட்டுவிட்டாரா என்பது.
7. அப்படி வேலைக்கு போகாத மனைவிக்கு சட்டப் போராட்டத்திற்கு தேவையான செலவு.
8. கணவரின் நிதிநிலை, அவரது வருமானம், பராமரிப்புக் கடமைகள் மற்றும் பொறுப்புகள்.
இந்த எட்டு வழிகாட்டுதல்களை அளவுகோல்களாக கொண்டு ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பிரவீன் குமார் ஜெயின் மற்றும் அஞ்சு ஜெயின் என்ற தம்பதியினரின் விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜீவனாம்சத்திற்கான இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அனைத்து நீதிமன்றங்களும் நிரந்தர ஜீவனாம்சத் தொகையை முடிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களாக இதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.