தென்காசியில் கனமழை எச்சரிக்கை காரணமாக மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி,செங்கோட்டை,குற்றாலம்,பாவூர்சத்திரம், கடையம் மற்றும் கடையநல்லூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தென்காசியில் மதியத்திற்கு மேல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தற்போது காலை முதலே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குற்றால அருவிகளில் மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.