திண்டுக்கல் அருகே தனியார் வங்கியின் முன்னாள் ஊழியரை கொலை செய்த மா்ம நபா்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (39). இவா், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை அதே பகுதியிலுள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். தற்போது எந்தவித பணிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்த பாலமுருகன், சிலரிடம் கடன் பெற்றார்.
வேலையில்லாத நிலையில், அந்தக் கடன் தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 3 நாள்களுக்கு முன் பாலமுருகன் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் அடுத்த தோமையார்புரம் மேடு பகுதியில் கை, கால்கள், கண் கட்டப்பட்டு பாலமுருகன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதைப் பார்த்த அந்தப் பகுதியினா், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், பாலமுருகனின் உடலைக் கைப்பற்றி விசாரித்தனா்.
இதனிடையே, பாலமுருகனை காணவில்லை என அவரது குடும்பத்தினா் கடந்த 3 நாள்களுக்கு முன்பு சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. பாலமுருகன் கொலைக்கு கடன் பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனா்.