வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நீடித்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு குறைந்து மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், இன்று டெல்டாமாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (14ம் தேதி) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 16 ம் தேதி வரை இலங்கை – தமிழக பகுதிகளை அடையக்கூடும் என்றும், அடுத்த இரண்டு வாரத்திற்குப் புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.