Close
ஜனவரி 5, 2025 9:52 மணி

மதுக்கூர் வட்டாரத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த பயிர்களை பட்டுக்கோட்டை எம்எல்ஏ ஆய்வு..!

மழை வெள்ளத்தில் பாதித்த பயிர்களை பார்வையிட்டு அதிகாரிகளிடம் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்ட பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை

மதுக்கூர் வட்டாரத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மதுக்கூர் வட்டாரத்தில் சம்பா நெல் பயிர் 4100 எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு நெல் பயிர் வளர்ச்சி பருவம் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவம் போன்ற பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ளது.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக அதிக அளவில் மதுக்கூர் வட்டாரத்தில் பெறப்பட்டுள்ளது தொடர்ந்து நெல் பயிரின் பல்வேறு வளர்ச்சி நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக பள்ளக்காலிலும் வடிகால் வாய்க்காலுக்கு அருகில் உள்ள வயல்களும் வாய்க்கால் நீர் நிரம்பும் பட்சத்தில் வயலுக்குள் உட்புகுந்து பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

வடகிழக்கு பருவமழைக்காக வேளாண் உதவி அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்களுடன் இணைந்து பயிர் பாதிப்பு விபரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள தொடர்பு விவசாயிகள் மூலமும் நேரடியாக வயலினை விவசாயிகளுடன்ஆய்வு செய்தும் பயிர் பாதிப்பு நிலையினை கண்காணித்து வருகின்றனர்.

மதுக்கூர் வட்டாரத்தில் நேற்றிலிருந்து பெறப்பட்ட தொடர் மழையினால் ஏற்பட்டபயிர் பாதிப்பினை இன்று கன்னியாகுறிச்சி,சொக்கனாவூர் மற்றும் பெரிய கோட்டை கிராமத்திலும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி உள்ளிட்டோர் நேரடியாக பார்வையிட்டனர்.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மதுக்கூர் வட்டாரத்தில் பயிர் சாகுபடி பரப்பு மற்றும் பயிர் பாதிப்பு விவரங்களை வேளாண் உதவி இயக்குனர் திலகவதியிடம் கேட்டறிந்தார். பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகளிடமிருந்து தகவல் பெறப்பட்டவுடன் நேரடியாக வயலில் உரிய அலுவலர்களுடன் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை பெற்று தர அறிவுறுத்தினார்.

பின் வேளாண் துணை இயக்குனர் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண் உதவி அலுவலர்களிடம் மத்திய திட்ட பணிகளின் சாதனை விபரம் குறித்து கேட்டறிந்தார். வேளாண் விரிவாக்க மையத்தினை ஆய்வு செய்து உளுந்து மற்றும் நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானிய விபரங்களை எடுத்து கூறி வழங்கிட கேட்டுக் கொண்டார்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயி ராமச்சந்திரனுக்கு 50% மானிய விலையில் பவர் ஸ்பிரேயர் வழங்கி பின் மதுக்கூர் வடக்கில் முன்னோடி இயற்கை விவசாயி மூர்த்தி மற்றும் நைனா முகமது வயலில் பயிரிடப்பட்டுள்ள கருப்பு கவுனி மற்றும் தூயமல்லி ரகங்களின் பயிர்நிலை குறித்து ஆய்வு செய்தார்.

கருப்பு கவுனிரகத்தில் 83 ஆம் நாளில் தேவையற்ற அதிக இலைகளை விவசாய தொழிலாளர் உதவியுடன் இலைகளை வெட்டி மீண்டும் வயலிலேயே காலால் மிதித்து விடுவதாக விவசாயி மூர்த்தி கூறினார். இந்த தொழில்நுட்பத்தினால் வயல் பணிகள் மேற்கொள்வது எளிதாகவும் மகசூல்குறைவு ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.

ஒற்றை நாற்று முறையில் கருப்பு கவுனி ரகம் சிறந்த வளர்ச்சி நிலையில் உள்ளது. இதேபோன்று இயற்கை விவசாய சாகுபடி செய்யும் விவசாயிகள் மீன் அமினோ அமிலம் ஈ எம் கரைசல் போன்றவை மட்டுமே பயன்படுத்தி பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்து அதிக லாபம் அடைந்திடவும் நன்மை செய்யும் பூச்சி ஆன பொறிவண்டுகளை அதிக அளவில் ஈர்க்க வரப்பில் உளுந்து பயிரிட்டு உள்ளதையும் வேளாண் துணை இயக்குனர் நேரில் கேட்டறிந்தார்.

இதைப் போல அனைத்து விவசாயிகளும் நெல் சாகுபடி எதுவானாலும் தேவையற்ற உர செலவை குறைத்து இயற்கை உரங்களை விவசாயிகளே உற்பத்தி செய்து நஞ்சில்லா உணவு உற்பத்திக்கும் நலமான வாழ்விற்கும் அடித்தளமாய் இருக்க கேட்டுக் கொண்டார்.

ஆய்வின்போது வேளாண்மை அலுவலர் சரவணன், வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு தினேஷ் முருகேஷ் சுரேஷ் மற்றும் ராமு ஆகியோர் உடன் இருந்தனர். வேளாண் உதவி இயக்குனர் மத்திய மாநில திட்ட பணிகளின் திட்ட சாதனை விபரங்களை எடுத்துரைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top