Close
டிசம்பர் 15, 2024 8:45 காலை

விவசாயிகளுக்கு ஜாக்பாட்டாக பெரியாறு 142… வைகை 71…. நிச்சயம்

முல்லை பெரியாறு அணை

இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பெரியாறு பாசன விவசாயிகளுக்கு ஜாக்பாட் ஆண்டாக மாறி விட்டது.

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு முழுவதும் ஓரளவு மட்டும் சீராகவே இருந்த வந்த மழை ஆண்டின் இறுதி மாதத்தில் சற்று வலுவாகவே பெய்துள்ளது. தமிழகத்தின் வடமாவட்டங்களும், பக்கத்தில் உள்ள விருதுநகர், தென்காசி, நெல்லை, மூணாறு மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் தத்தளித்த போது, தேனி மாவட்டம் மட்டும், சுமாரான மழைப்பொழிவுடன் இருந்து வந்தது. அதாவது தேனி மாவட்டத்தின் அணைகள், கண்மாய்கள் கூட நிரம்பவில்லை.

குறிப்பாக பெரியாறு அணை நீர் மட்டம் 120 என்ற நிலையில் இருந்தது. வைகை அணையும் 49 அடி உயரத்திலேயே நீடித்து வந்தது. இந்த நிலையில் தான் வடமாவட்டங்கள் தண்ணீரில் மிதந்தன. தேனி விவசாயிகள் உண்மையில் பலத்த மழைக்காக ஏங்கத்தொடங்கினர்.

காரணம் இதே நிலை நீடித்தால் வரும் 2025ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் முதல் போகம் கேள்விக்குறியாகி விடும். பெரியாறு பாசன விவசாயிகளும், ஒரு கோடி பொதுமக்களும் குடிநீருக்கு கூட தவிக்க வேண்டியிருக்கும். இந்த சிக்கலை எதிர்கொள்ள உண்மையில் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சப்பட்டனர்.

இந்நிலையில் தான் தேனி மாவட்டத்திற்கு டிசம்பர் இரண்டாவது வாரம் ஜாக்பாட் வாரமாக மாறியது. அதாவது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் போதே, ‘‘தேனி மாவட்டத்திற்கு மழை பெய்யும்’’ என வானிலை ஆய்வு மையம் நல்ல தகவல் சொல்லியது. சொன்னது போன்றே டிசம்பர் 11ம் தேதி மாலை தேனி மாவட்டம் இருட்டுக்கட்டியது.

சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட தொடர்ந்து நான்காவது நாளாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. பலத்த மழையும் இல்லை. குறைவான மழையும் இல்லை. மாவட்டம் முழுவதும் பரவலாக சமச்சீரான அளவில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. பெரியாறு அணை, வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்துக்கட்டியது.

பெரியாறு அணைக்கு நீர் வரத்து கிடுகிடுவென உயர்ந்து விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடியை தொட்டது. வைகை அணைக்கு நீர் வரத்து கிட்டத்தட்ட 20 ஆயிரம் கனஅடியை எட்டி விட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பெரியாறு அணை நீர் மட்டம் 128 அடியை எட்டி விட்டது. அதாவது 24 மணி நேரத்தில் 8 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 18000ம் கனஅடி வந்து கொண்டுள்ளது. இன்று பிற்பகலுக்குள் பெரியாறு நீர் மட்டம் 130 அடியை கடந்து விடும். வரும் டிசம்பர் 20ம் தேதி வரை மழைக்கான உத்திரவாதம் கிடைத்துள்ளதால் அணை நீர் மட்டம் 142ஐ எட்டும் வாய்ப்புகள் உள்ளது.

வைகை அணை நீர் மட்டமும் இன்று காலை 8 மணிக்கு 57 அடியை கடந்தது. அணைக்கு விநாடிக்கு 11000ம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணை நீர் மட்டம் இன்று பிற்பகலுக்குள் 62 அடியை தாண்டும். ஓரிரு நாளில் 71 அடியை எட்டி விடும். இன்று பிற்பகலுக்குள் பெரியகுளம் சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.28 அடியை தாண்டி நிரம்பி வழியும்.

ஏற்கனவே சண்முகாநதி நிரம்பி விட்ட நிலையில், இன்று பிற்பகலில் மஞ்சளாறு அணையும் நிரம்பி விடும். ஆக இன்றுக்குள் தேனி மாவட்டத்தில் மூன்று அணைகள் நிரம்பி விட்ட நிலையில், ஓரிரு நாளில் பெரிய அணைகளான வைகை அணையும், பெரியாறு அணையும் நிரம்பி விடும். இன்று முழுக்க பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தேனி மாவட்ட விவசாயிகள் ஜாக்பாட் கிடைத்தது போல் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top