Close
டிசம்பர் 14, 2024 6:57 மணி

சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு : கிராம மக்களுக்கு எச்சரிக்கை..!

சாத்தியார் அணை ஓடையை கடக்கும் கிராம மக்கள்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை சில மாதங்களுக்கு முன் பெய்த பருவமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டி அணை முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதன் காரணமாக சாத்தியார் அணையிலிருந்து 11 கிராம கண்மாய் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான திண்டுக்கல், சிறுமலை, உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சாத்தியார் அணை நீர்வரத்து ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் வரத்து ஓடையை கடந்து செல்லும் தெத்தூர் ஊராட்சி கெங்கமுத்தூர் கிராம மக்கள் ஆபத்தை உணராமல் ஓடையின் இருபுறமும் கயிறு கட்டி நீர்வரத்து ஓடையை கடந்து செல்கின்றனர்.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக ஓடையை கடந்து தான் மற்ற ஊர்களுக்கு செல்ல உள்ளதால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்ட முன்வர வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்கள் தொடர் கனமழை பெய்யும் பட்சத்தில் சாத்தியார் அணை முழு கொள்ளளவை எட்டி மீண்டும் மறுகால் பாயும் வாய்ப்புள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தான் அணை மூலம் பாசன வசதி வரும் 11 கிராம கன்மாய்களுக்கு பாசன வசதிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக அணைக்கு அதிக அளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் மீண்டும் அணை முழுவதுமாக நிரம்ப உள்ளதால் இப்பகுதி பாசன வசதி பெறும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top