Close
ஏப்ரல் 4, 2025 5:08 காலை

வீடூர் அணையில் உபரி நீர் வெளியேற்றம்: அமைச்சர் பொன்முடி ஆய்வு

வீடூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதை தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, தமிழ்நாடு முதலமைச்சர், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக அணைகளுக்கு அதிகப்படியான நீர் வரத்து வரப்பெறுவதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், ஆறுகளில் அதிகப்படியான நீர் செல்வதாலும் கரையோர கிராம பகுதி மக்களை முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

மேலும், தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கன மழையின் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், மழை பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

அதனடிப்படையில், இன்றைய தினம், வீடூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வராக நதி மற்றும் தொண்டி ஆறு ஆகிய ஆறுகளின் மூலம் வீடூர் அணைக்கு நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. வீடூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 32 அடியாகும். தற்பொழுது 29 அடி என்கிற அளவில் நீர்மட்டம் உள்ளது.

வீடூர் அணைக்கு விநாடிக்கு 8000 கன அடி நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளதால், வரப்பெறும் 8000 கன அடி நீரும் 9 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், வீடூர் அணையினை சுற்றியுள்ள கரையோர கிராமப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பாக இருந்திடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வீடூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், வீடூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள 35 பழங்குடியினர் மக்களுக்கு மதிய உணவினை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சேதுநாதன், மாசிலாமணி, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் சமூக வாரிய உறுப்பினர் செஞ்சி சிவா, ஒலக்கூர் ஒன்றிய குழு தலைவர் சொக்கலிங்கம், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் சிவா, இளநிலை பொறியாளர் பாபு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top