Close
டிசம்பர் 14, 2024 9:35 மணி

துரை. மதிவாணன் பிறந்த தினமும் அவரின் உயரிய குணங்களும்

துரை. மதிவாணன் பிறந்த தினத்தில் அவரின் நீங்க நினைவுகளை அவரின் மனைவி உள்ளிட்டோர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சிப்பா, தோளில் வெள்ளைத்துண்டு.இது புலவர் துரை மதிவாணன் என்கிற தனக்கோடியின் அடையாளம். உடையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் எளிமை அவரது அடையாளம்.

தி.மு.க. தொடங்கியதிலிருந்து 1963 வரை – திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டது வரை – அக்கட்சியின் புதுக்கோட்டையின் அடையாளமாகத் திகழ்ந்தவர். போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். பெரும் செல்வத்தை இழந்தவர். கட்சியை விட்டு வரும் போது கையில் இருந்த புலவர் பட்டம் கை கொடுத்தது. பள்ளி ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

சாதி பேதமற்ற வாழ்க்கை அவருடையது. தமிழ்த் தேசிய பற்றாளர். நெடுமாறன் போன்றவர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். வ.உ.சிக்கு ஆண்டுதோறும் விழா எடுப்பவர். அவரைப் பற்றி மிகச்சிறந்த நூலை தொகுத்து வெளியிட்டுள்ளார். அவரிடம் பயின்றவர்கள் பலர் உயர்நிலைக்குச் சென்றுள்ளனர். அவரின் 95 வது பிறந்தநாள் இன்று, டிசம்பர் 14, 2024.

இந்த மலர் மதிவாணனை புகழ் பாடும் மலர் அல்ல. தி.மு.க.வின் 1963 ஆண்டு வரையிலான வரலாற்றையும், தமிழ் தேசிய வரலாற்றையும் அறிய உதவும் மலர். தன் வரலாற்றோடு தமிழக அரசியல் வரலாற்றையும், புதுக்கோட்டையில் தி.மு.க. வளர்ந்த வரலாற்றையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். பள்ளி ஆசிரியராக செம்மையாகப் பணியாற்றியதையும் உணர்வு பூர்வமாக பதிவு செய்துள்ளார்.

பழ.நெடுமாறன், மணியரசன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ந.ஜெயராமன்,
ச. ஆரோக்கியசாமி இன்னும் அவரை நேசிக்கும் பலரும் அவரின் உயரிய குணங்களை சித்திரமாக்கித் தந்துள்ளனர் இம்மலரில்.

மலரில் மதிவாணனின் ஆசிரியர்கள், அவருடன் பயின்றவர்கள், அவருடையமாணவர்கள் பட்டியலும், அவர் படைத்த நூல்களும் விபரமும், தயாரித்த மலர்களின் விபரமும் தரப்பட்டுள்ளது மலரின் சிறப்புகளில் ஒன்று.

துரை. மதிவாணன் 90 ஆம் அகவை மலரில் இடம் பெற்றுள்ள அவர் மனைவி பூங்கோதை (எ) அம்மாளு அம்மாள் தெரிவித்துள்ளதாவது:

எங்கள் திருமணம் பழைய புரோகிதத் திருமணமாக நடைபெறவில்லை. புதிய சீர்திருத்தத் திருமணமாகவும் முறையாக நடக்கவில்லை. எங்களுக்கு பெற்றோர் இல்லை. பெரியவர்கள், உறவினர்கள், சாதிமறுப்புத் திருமணத்தை ஏற்கவில்லை. திருமணம் கீரனூர் திரையரங்கில் நடைபெற்றது. கணவரின் நெருங்கிய உறவுக்காரப்பெண்கள் வந்து அழுது கொண்டிருந்தனர். விழாத்தலைவருக்கோ, வாழ்த்தியவர்களுக்கோ மாலையோ துண்டோ அணிவிக்கவில்லை – ஏன் மணமக்களுக்கே மாலையில்லை.

மணமக்கள் திருமண உறுதிப்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட்டு படிக்கச் சொல்வார்களே அதுவும் இல்லை. தலைவரும் மற்றவர்களும் வாழ்த்திப் பேசினர். திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு பையில் தேங்காயோ பழமோ போட்டுக் கொடுக்கவில்லை. நல்ல வேளை! மணமக்களை, விழாத்தலைவர் டி.கே.சீனிவாசன் மற்றும் உள்ள கட்சிக்காரர்களை வைத்துப் புகைப்படம் எடுத்தார்கள். திருமணம் முடிந்து சொந்த ஊருக்குப் போக முடியவில்லை. கீரனூரில் வாடகை வீட்டில் குடியிருந்தோம் என தெரிவித்துள்ளார்.

தலைவர் தேசிய இலக்கியப் பேரவை ச.ஆரோக்கியசாமி தெரிவிக்கையில், துரை மதிவாணனுக்கு ஒரு கொள்கை ஆண்டு அது தமிழர் தேசியம். எனக் கொரு கொள்கையுண்டு அது இந்தியத் தேசியம். அவரோ இறை மறுப்பாளர். நானோ இறை நம்பிக்கையுடையவன். இப்படி எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் எப்போதும் அடுத்தவர் கருத்தை மதிக்கும் குணக்குன்று அவர் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் அவர்க்கு நிகர் அவரே. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுப்பரமணிய சிவா, பாரதியார், நேதாசி, வல்லத்தரசு முதலியவர்களுக்கு விழா எடுத்தப் பெருமை பெற்றவர். வயதாகி விட்டது ஓய்வெடுங்கள் என்பர் அவர் பிள்ளைகள். அவர் தொடர்ந்து ஏதாவது பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார் என தெரிவித்துள்ளார்.

மதிவாணன் தெரிவிக்கையில், அண்ணல் காந்தியடிகள் தமிழ் நாட்டில் 1896 முதல் 1946 வரை சுற்றுப் பயணம் வந்துள்ளார். 1946 ல் நான் கீரனூர் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 1946 இல் அவரது இறுதிச் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டுக்கு வரும் போது திருச்சி தொடர் வண்டிச் சந்திப்பில் போய்ப் பார்க்கலாம் என்று மாணவ நண்பர்கள் சிலருடன் திருச்சி சென்றேன். திருச்சி சந்திப்பில் கால் வைக்க இடமில்லை. கட்டுக்கடங்காத இலட்சக்கணக்கான மக்கள் கூட்டம். எனவே அரியமங்கலம் சென்றோம். காந்தியடிகள் வந்த தனிச்சிறப்பு வண்டி அங்கே கின்றது. அண்ணலைக்காணும் நற்பேறு பெற்றேன். வண்டியில் நின்றவாரே சிறுது நேரம் பேசினார். இராசாசி மொழிபெயர்த்தார். இன்றளவும் அக்காட்சியை மனக்கண் என் நிறுத்தி மகிழ்ந்து கொண்டுள்ளேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top