Close
டிசம்பர் 15, 2024 3:03 மணி

இவர்கள் தான் மரியாதைக்குரிய மனிதர்கள்..! சுத்தக்காரர்கள்..!

தேனி கே.ஆர்.ஆர்., நகரில் மழையில் நனைந்து கொண்டே வீடு வீடாக குப்பை சேகரிக்கும் துப்புரவு பணியாளர் மாரிச்சாமி...

தேனி மட்டுமல்ல… உலகம் முழுவதும் முதல் மரியாதைக்குரியவர்கள் துப்புரவு தொழிலாளர்கள் தான்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தை புயல் மழை வாட்டி எடுத்து வருகிறது. ஒரு வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டாலே… அந்த நீரை வெளியேற்ற முடியாமல் தவியாய் தவிக்கின்றனர்.

ஓரிரு நாள் குப்பை சேகரிப்பவர் வராவிட்டால்… வீட்டிற்குள் குப்பை வாடை அடிக்க தொடங்கி விடுகிறது. அதுவும் மழைக்காலம் என்றால் வீட்டிற்குள் குப்பைகளை வைத்திருந்தால், சாப்பிடுவது கூட சிரமம்.

அந்த அளவு வாடை இருக்கும். இந்த நிலையில், அதாவது இந்த அடைமழை காலத்தில் நனைந்து கொண்டே வீடு, வீடாக வந்து குப்பை சேகரிப்பவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். மழைக்காலத்தில் தலையில் ஒரு துணியை கட்டிக்கொண்டு, குப்பை வண்டியை நனைந்து கொண்டே தள்ளிக் கொண்டு வீடு, வீடாக வந்து வாசலில் நின்று அம்மா குப்பை கொட்டுங்க என்று கேட்டு வாங்குபவர்களை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

தேனியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி மந்தமாகவே இருந்தது. இதனால் தெருவோரங்களில் குப்பை கொட்டினர். ஒரு இடத்தில் குப்பை கொட்டுபவர்களின் தொல்லை தாங்க முடியாமல், ‘குப்பை கொட்டினால் செருப்படி விழும்’ என்று போர்டே வைத்தனர்.

அந்த அளவுக்கு குப்பை பிரச்னை நெருக்கடிகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக சில நாட்களாக தொடர்ந்து வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் பிரச்னை முழுமையாக தீராவிட்டாலும், அதன் தீவிரத்தன்மை குறைந்துள்ளது.

தேனியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழையில் நனைந்து கொண்டே துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக வந்து குப்பை சேகரிப்பதை பொதுமக்கள் பெரிய அளவில் பாராட்டினர்.

தேனியில் மட்டுமல்ல… இந்த சூழல்… கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் குப்பை சேகரிக்கும் பணி தீவிரமாகவே நடந்து வருகிறது. அதுவும் மழை நீர் வடிந்து செல்ல… மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளையும் செய்து கொண்டு, வீடு, வீடாகவும் குப்பை சேகரிப்பவர்களை தான் மிகவும் மரியாதைக்குரிய மனிதர்களாக போற்ற வேண்டும்.

அவர்கள் குப்பைக்காரர்கள் அல்ல, சுத்தக்காரர்கள். குப்பை போடுபவர்கள் குப்பைக்காரர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top