Close
டிசம்பர் 19, 2024 12:10 காலை

ஐ.டி. துறையிலும் முத்திரை பதிக்கும் கோவை..!

கோவை IT பார்க்

ஐ.டி., துறையிலும் கோவை முத்திரை பதித்து வருகிறது என சிஐஐ கோவை கிளை முன்னாள் தலைவர் பிரஷாந்த் தெரிவித்தார்.

தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவை, ஜவுளி, பம்ப்செட், வார்ப்படம், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக தகவல் தொழில் நுட்பத் துறையிலும் (ஐ.டி.) கோவை முத்திரை பதித்து வருகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிக எண்ணிக்கையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெங்களூரு போன்ற நகரங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களால் பல முன்னணி பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் கிளைகளை அமைத்துள்ளன.

கோவை மாவட்டத்தில் 2024 ஜனவரி நிலவரப்படி ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவிநாசி சாலை, சரவணம்பட்டி சுற்றுப்புற பகுதிகள், பொள்ளாச்சி சாலை என பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் கோவையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் உடனடியாக இங்கேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top