Close
டிசம்பர் 18, 2024 10:51 காலை

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ அதன் நடைமுறை அறிவோம் வாங்க..!

ஒரே நாடு; ஒரே தேர்தல் -கோப்பு படம்

பாஜ அரசின் முக்கிய செயல் திட்டங்களில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் மிக முக்கியத்திட்டமாகும். கடந்த சில ஆண்டுகளாகவே ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து பரவலான விமர்சனங்கள் இருந்துவந்தது. இந்த திட்டத்தை அமல்படுத்தும்பொருட்டு அது குறித்து ஆய்வு செய்வதற்காக 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டத்தின்போது, திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட 15 கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் அதிமுக உள்ளிட்ட 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்தக் குழு தனது ஆய்வை முடித்து 2024 மார்ச் 14ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வழங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த செப். 18ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவைக் குழு ஏற்றுக்கொண்டு அதற்கு ஒப்புதல் வழங்கியது.

அதன் அடிப்படையில் நேற்று (17ம் தேதி) நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில், 369 எம்பிக்கள் பங்கேற்று இருந்தனர். கூட்டுக்குழுவுக்கு மசோதாவை அனுப்ப 220 எம்பிக்கள் ஆதரவும், 149 எம்பிக்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையடுத்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இனி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு உட்படுத்தும். கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். இந்த ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா குறித்து நாம் தெரிந்துகொள்ளலாம், வாங்க.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அடிக்கடி தேர்தல் நடப்பதால், பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றில் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை எதிர்கொள்ள ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை நடைமுறைப்படுத்த தெரிவிக்கப்பட்டது.

முதலில் நாடாளுமன்ற மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறும். அது முடிந்த 100 நாட்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

புதிதாக அமைக்கப்படும் மாநில சட்டசபைகளின் கால அவகாசம், அடுத்த பொதுத் தேர்தலுடன் இணைந்ததாக இருக்கும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிக்கையில், இந்தச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும் உறுதிப்படுத்தவும் ஒரு அமலாக்கக் குழுவை நிறுவுவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக அரசியலமைப்புச் சட்டத்தில் 324A சட்டப்பிரிவு சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்துத் தேர்தல்களுக்கும் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையை உருவாக்குவதற்கான சட்டப்பிரிவு 325 இல் திருத்தம் ஒன்றையும் குழு முன்மொழிந்துள்ளது. ஆனால், இந்தத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும்.

தொங்கு சட்டமன்றம் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பட்டால், புதிய தேர்தல்கள் நடத்தப்படும். ஆனால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையின் பதவிக்காலம் அடுத்த பொதுத் தேர்தல் வரை மட்டுமே நீடிக்கும்.

திறமையான தேர்தல் நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக EVM மற்றும் VVPAT போன்ற அத்தியாவசிய உபகரணங்களை வாங்குவதற்கு முன்கூட்டியே திட்டமிடுவதை உறுதி செய்யுமாறும் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top