Close
டிசம்பர் 18, 2024 3:53 மணி

மழையால் கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி..!

தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கிணறுகளில் உயர்ந்துள்ள நீர்மட்டம்

உசிலம்பட்டி:

மதுரை,உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் – உப்பு நீரும் நன்னீராக மாறி வருவதாக விவசாயிகள் பெருமிததுடன் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் கனவு திட்டமாக இருந்த 58 கால்வாய் திட்ட பணிகள் நிறைவடைந்து கடந்த 5 ஆண்டுகளாக அவ்வப்போது, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்மாய் 33 கண்மாய்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடந்த கண்மாய்கள் மற்றும் இக் கால்வாய் செல்லும் வழியில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டமும் ஒவ்வொரு முறை தண்ணீர் திறந்துவிடப்படும் போதும் கணிசமாக உயரத் துவங்கியது.

இந்நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்கு முன்பே கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த சிறு மழைக்கே உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிணறுகளிலும், கண்மாய் மற்றும் விவசாய நிலங்களிலும் ஊற்று நீர் உருவாகி ஆங்காங்கே நீர் வெளியேறி வருகிறது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை 3 முதல் 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் இல்லாமல் ஆயிரம் அடிக்கு மேல் சென்ற நிலத்தடி நீர் மட்டம், 30 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு உயர்ந்து ஆங்காங்கே ஊற்றுகளாக உருவாகியுள்ளது, இதனால் நீர் நிலைகளும் நிரம்பி வழிவதோடு, உப்பு நீராக இருந்த நீரும் நன்னீராக மாறி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15 நாட்களாவது உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீரை திறந்து விட நிரந்தர அரசானை வழங்கி தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top