விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கும் போது கூட வன்மத்தை வெளிப்படுத்திய நபரை கோர்ட் கண்டித்தது.
கோவை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒருவர் தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாள்களாக நடைபெற்ற நிலையில், “உங்கள் மனைவிக்கு ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.” என்று கணவருக்கு உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி அந்த நபர் தன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக நீதிமன்றத்துக்கு பணம் கொண்டு வந்தார். அப்போது ரூ.80,000 தொகையை நோட்டாக கொடுக்காமல் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக 20 மூட்டைகளில் எடுத்து வந்து நீதிபதி முன்னிலையில் வைத்தார்.
இதைப் பார்த்து மொத்த நீதிமன்றமும் அதிர்ச்சியடைந்தது. நீதிபதியோ, ”இப்படி நாணயங்களை மூட்டையில் கொண்டு வருவதை ஏற்க முடியாது. இந்த தொகையை ரூபாய் நோட்டாக மாற்றி ஜீவனாம்சம் கொடுங்கள்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். இதையடுத்து அந்த நபர் நாணயம் மூட்டைகளை காரில் எடுத்துச் சென்றார்.
இதனை அறிந்த மக்கள், ‘விவாகரத்து பெற்ற பின்னரும், நீதிமன்றம் உத்தரவிட்டபடி ஜீவனாம்சம் கொடுக்கும் பணத்தையே இப்படி வன்மத்துடன் கொண்டு வந்த நபர், அவருடன் வாழும் போது, எவ்வளவு நெருக்கடிகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்திருப்பார்’ என்பதை நினைத்தாலே மனம் நடுங்குகிறது.
நல்லவேளை அந்த பெண் விவாகரத்து பெற்று தன்னை பாதுகாத்துக் கொண்டார் என கணவனின் செயலை பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.