Close
டிசம்பர் 25, 2024 5:44 மணி

பாவம், வயிற்றெரிச்சலில் பழனிசாமி புலம்புகிறார்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டல்..!

ஈரோடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோட்டில் 50,088 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்துகொண்டார்.

ஈரோட்டில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியை, கேரளா மக்களும் பாராட்டுகின்றனர். அத்திக்கடவு, அவினாசி திட்டத்தின் மூலம் ஈரோட்டில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் மறைவு எனக்குள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவு ஈரோடு மக்களுக்கு மட்டுமல்ல. தமிழகத்திற்கே இழப்பு. வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுவிட்டு அதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் முந்தைய அ.தி.மு.க., அரசு மாதிரி இல்லை இந்த அரசு.

திராவிடல் மாடல் அரசில் ஏராள திட்டங்கள்

சொன்னதை செய்வோம் என்று செய்துக்காட்டிய கருணாநிதி வழியில் நடைபெறும் உங்கள் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு இது. ஏரளாமான திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறோம். ஈரோடு மாநகராட்சி அந்தியூர், கோபி,மொடக்குறிச்சியில் உள்ள சாலைகள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். சென்னிமலை உள்ளிட்ட 50 கிராமங்களில் ரூ.15 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும். தொடர் திட்டங்களை தந்து கொண்டு இருப்பதால், மக்கள் எங்களுக்கு தொடர் வெற்றியை தந்து கொண்டு இருக்கிறார்கள்.

வயிற்றெரிச்சலில் பேசுகிறார்

கடந்த கால ஆட்சியாளர்கள், அதாவது இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அவர்களால் தி.மு.க.,வின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தி.மு.க., அரசு தொடர்ந்து திட்டங்களை அறிவிக்கிறது. சொன்ன படி திட்டங்களை நிறைவேற்றுகிறது. அவர்களுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கிறது என வயிற்றெரிச்சல் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புலம்பிகிட்டே இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் ஆளுங்கட்சியை விமர்சிக்கலாம் தவறு கிடையாது. நியாமான புகார்களை சொல்லலாம். தி.மு.க., ஆட்சி மீது குற்றம்சாட்ட ஏதும் கிடைக்காமல் பொய் சொல்லக் கூடாது.

200 அப்பாவி மக்களை கொன்றது யார்?

பழனிசாமி என்ற தனிநபராக அவர் பொய் சொல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவராக சொல்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. மத்திய அரசு நிதிக்காக காத்து இருக்காமல் மாநில அரசே எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம். இதனை பழனிசாமியால் பொறுத்து கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டு இருக்கிறார். முன்னெச்சரிக்கை இல்லாமல் சாத்தனூர் அணையை திறந்து விட்டார்கள் என்று பொய்யை பரப்பினார். அதிமுக ஆட்சியில் இருந்த போது நிலைமை என்ன?

செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு 200 அப்பாவி மக்கள் உயரிழந்தனர். இதை எல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் நினைக்கிறாரா? செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தியது அதிமுக. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, செந்தில் கவுண்டமணி காமெடி போல, சொன்னதை திரும்ப திரும்ப சட்டசபையில் பழனிசாமி சொன்னார். நான் உறுதியோடு எழுந்து நான் முதல்வராக இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோம் என தெளிவாக சொன்னேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top