அடைமழை விட்டாலும் செடிமழை விடுவதில்லை என்பதுபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்துவிட்டார். ஆனால் ஓய்வுக்குப் பின் தொடரும் சர்ச்சைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
யாருமே எதிர்பார்க்காத நிலையில் ஆஸ்திரேலிய தொடரின் இடையிலேயே அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததுதான் இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி.
38 வயதாகும் அஸ்வினுக்கு 2022ம் ஆண்டுக்குப் பிறகு டி20 போட்டிகளிலும், 2023 உலகக் கோப்பைக்குப் பின்னர் ஒரு நாள் போட்டிகளிலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஸ்வின் தொடர்ந்து விளையாடி வந்தார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்தது. இதையடுத்து, அஸ்வினுக்கு ஆஸ்திரேலியா செல்வதில் முழு விருப்பம் இல்லை என்றும் தெரிகிறது.
ஏனெனில் ஆஸ்திரேலியா தொடரில் வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, அஸ்வின் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாத நிலையில், அனுபவ வீரர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பூம்ரா கேப்டனாக இருந்த இந்த போட்டியில், அஸ்வின் சேர்க்கப்படாததற்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதற்கு கூறப்படும் காரணம் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் பொருட்டு வாஷிங்டன் சுந்தருக்கு கம்பீர் வாய்ப்பு அளித்ததாகவும் தெரிகிறது.
தான் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்த அஸ்வின், திடீரென ஆஸ்திரேலிய தொடரின் இடையிலேயே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதையே தமிழ்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்தும் உறுதிப்படுத்தியுள்ளார். அஸ்வினுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய அஸ்வினுக்கு ‘Farewell Test’ போட்டியில் விளையாடுவதற்காக பிசிசிஐ அனுமதித்திருக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலித்துக்கொண்டுள்ளன. தான் கேப்டனாக இருந்திருந்தால் அஸ்வின் இப்படி ஓய்வு பெறுவதை அனுமதித்து இருக்கமாட்டேன் என்று கபில்தேவ் கூறியுள்ளார். இதேபோலவே கோலி கேப்டனாக இருந்திருந்தால் அஸ்வினை ஓய்வுபெற அனுமதித்து இருக்க மாட்டார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலியும் தெரிவித்துள்ளார்.
இப்படியாக அடை மழை விட்டும் செடிமழை விடாத கதையாக அஸ்வின் ஓய்வு அறிவித்தப் பின்னரும் ஓய்வுக்குப் பின்னால் மறைந்துள்ள சர்ச்சைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.