Close
டிசம்பர் 23, 2024 3:08 காலை

சோழவந்தானில் மர்ம நோய்க்கு 1000 ஏக்கர் நெற் பயிர் சேதம் : நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..!

நோய் தாக்கிய பயிர்களுடன் விவசாயிகள்

சோழவந்தான் :

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியார் பாசன கால்வாய் மூலம் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு செய்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் நெல் பயிரில் ஒருவித மர்ம நோய் தாக்கியதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் பாதிப்பு அடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

சோழவந்தான் வடகரை கண்மாய் மற்றும் தென்கரைத்தன்மை பாசனம் மூலம் சோழவந்தான் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது.

NLR ரகம் என்று சொல்லக்கூடிய நெல் 135 நாட்களில் பலன் தரக்கூடிய நிலையில் 70 நாட்களிலேயே நெல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விவசாயிகள் செவட்டை நோய் தாக்கி இருக்கலாம் என கருதி அதற்கான மருந்து வாங்கி நெல் பயிரில் அடித்து உள்ளார்கள்.

ஆனால் கருகிய பயிர்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகையால் உடனடியாக வேளாண்மை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து கூறியுள்ளார்கள். அவர்கள் பார்த்த பிறகு நெல் பயிரை காக்க மாற்று மருந்து அடிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

அதற்குள் நெல் பயிர்கள் முழுவதும் கருகிய நிலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டு நெற்பயிர் சேதம் அடைந்து விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

வருவாய்த் துறையினர் பாதிக்கப்பட்ட வயல்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் கஷ்டத்தை அரசுக்கு எடுத்துக் கூறி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top