பாஜக அரசு அராஜக அரசு மட்டுமன்றி மக்களுக்கான அரசு அல்ல. பண மதிப்பிழப்பு, குடியுரிமை திருத்த சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் என ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் இல்லாத தவறுகளை பாஜக செய்து வருகிறது என்று திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் பேட்டியில் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பள்ளி கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி சசிகாந்த் செந்தில்,
தமிழ் பண்டிகை நாட்களில் தேர்வுகளை நடத்தும் ஒன்றிய அரசு குறித்த கேள்விக்கு,
பாஜகவின் உணர்வின்மையை காட்டுவதாகவும், எப்போதும் வடக்கு தெற்கு என பாகுபாடு இருக்கும் நிலையில் தற்போது பாஜக தமிழ்நாட்டை குறி வைப்பதாக சாடினார்.
அண்ணல் அம்பேத்கர் குறித்து இழிவாக பேசியதை மடைமாற்றம் செய்வதற்காகவே ராகுல் காந்தியின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அம்பேத்கர் குறித்தான செய்தியை எளிதாக கடந்து செல்ல விடமாட்டோம் எனவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார்.
பாராளுமன்றத்தில் பல நகைச்சுவையான சம்பவங்கள் நடந்து வருகின்றன எனவும், எதிர்கட்சியினர் கூச்சல், குழப்பம் ஏதுமின்றி அமைதியாக பாராளுமன்றத்தில் அமரும் போதிலும், சபாநாயகர் அவையை ஒத்தி வைத்து விடுகிறார் எனவும், எதற்கு அவையை ஒத்தி வைக்கிறார் என தெரிவதில்லை என்றார்.
எதிர்க்கட்சிகள் போராட்டங்களை அறவழியில் வைத்திருந்தாலும் பாஜகவினர் அதனை வன்முறையாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். பொது வெளியில் சமூகத்தில் எந்த செயலை செய்து வந்தார்களோ தற்போது அதே செயலை பாராளுமன்றத்திலும் பாஜகவினர் செய்து வருவதாகவும், இதில் ஆச்சரியம் இல்லை என தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முட்டாள் தனத்தின் பிரதிபலிப்பு எனவும், பாஜக அரசு அராஜக அரசு மட்டுமன்றி மக்களுக்கான அரசு இல்லை என்றார். பண மதிப்பிழப்பு, குடியுரிமை திருத்த சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் என ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் இல்லாத தவறுகளை பாஜக செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.