நாமக்கல் :
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிடவேண்டும் என கோரி, மாவட்ட வங்கி ஊழியர்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில், 3வது மாவட்ட மாநாடு, நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வைரப்பன், மத்திய குழு உறுப்பினர் விஜயலட்சமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் அருணாசலம், மாநாட்டை துவக்கி வைத்தார். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
மாநாட்டில், வங்கித் துறை சீர்திருத்தம் என்ற பெயரால் எடுக்கப்பட்டு வரும் சீர்குலைவு நடவடிக்கைகளை, வன்மையாக கண்டிக்கிறோம். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் வங்கிகள் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும். அனைத்து தனியார் வங்கிகளும், கிராம வங்கிகளும், தேசிய மயமாக்கப்பட்டு வங்கிச் சேவை அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.
வங்கிகளில் நாளுக்கு நாள் மலைபோல் குவியும் வாராக் கடன்களால், வங்கித்துறை பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், கடன் வசூல் தீர்ப்பாயங்கள் துவக்கப்பட்டாலும், கடன் வசூலில் தொய்வு ஏற்படுகிறது. இவற்றை களைந்திடும் வகையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்.
கடன் செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
வங்கித்துறை சிறப்பாக செயல்படவும், வாடிக்கையாளர் சேவை மேம்படவும் தேவையான அளவு ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
காலியாகவுள்ள அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதோடு, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம், கடைநிலை ஊழியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
தற்போது, வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வங்கிகள் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் தனியாருக்கு ஒப்படைக்கிறது. இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
அவுட்சோர்சிங் முறையை நிறுத்தவும், அதன் மூலம் இளைஞர்கள் நிரந்தர வேலைவாய்ப்பை பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.