நாமக்கல் :
நாமக்கல்லில் இருந்து ஓமன் நாட்டிற்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட 2 கோடி முட்டைகளை, அந்த நாடு இறக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. அவற்றை இறக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் மற்றும் மத்திய அமைச்சருக்கு, கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1200 கோழிப் பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினசரி 5.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு நாள்தோறும் சுமார் 50 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்திய அளவில் நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே அதிக அளவில் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கத்தார், ஓமன், துபாய், ஆப்பிரிக்கா உள்ளிட் சுமார் 10 நாடுகளுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் கண்டெயினரில் பேக்கிங் செய்யப்பட்டு, கேரளாவில் உள்ள துறைமுகம் வழியா£க கப்பலில் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஓமன் நாட்டில் தற்போது முட்டை இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து 40 கண்டெய்னர்களில் கப்பலில் அனுப்பிய சுமார் 2 கோடி முட்டைகள் ஓமன் நாட்டின் துறைமுகத்தில் இறக்காமல் தேக்கமடைந்திருந்தன. இதையொட்டி கோழிப்பண்ணையாளர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், ராஜ்யசாப எம்.பி. ராஜேஷ்குமார், லோக்சபா எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பேசினார்கள்.
வெளியுறவுத்துறை மூலம், ஓமன் நாட்டின் தூதரக அதிகாரிகளிடம் பேசி, துறைமுகத்தில் தேங்கியிருந்து முட்டைகளை இறக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், ஓமன் சென்றுகொண்டிருக்கும் மேலும் 2 கோடி முட்டைகளையும் இறக்குவதற்கு அந்த நாட்டுடன் பேசுவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
தமிழக ஆதி திராவிடர் நலத்தறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், தமிழக அரசின் முதன்மை செயலாளர், ராஜ்யசபா எம்பி. ராஜேஷ்குமா, லோக்சபா எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் மூலம் ஓமன் மற்றும் கத்தா நாட்டின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முட்டை ஏற்றுமதி தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி, நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முட்டை ஏற்றுமதியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், நாமக்கல் கலெக்டர் உமா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.