Close
டிசம்பர் 25, 2024 12:30 மணி

15 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றினால் திமுகவிற்கு நிபந்தனையின்றி ஆதரவு : அன்புமணி ராமதாஸ்..!

காஞ்சிபுரத்தில் வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

15 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றினால் வரும் தேர்தலில் திமுகவிற்கு நிபந்தனையின்றி ஆதரவு தர தயார், எந்தவித எம்எல்ஏ சீட்டும் எங்களுக்கு தேவையில்லை. காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு..

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயிரம் நாட்கள் கடந்த நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வகையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அதனை செயல்படுத்த பல்வேறு காரணங்களை கூறிவரும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், உச்சநீதிமன்றம் முறையான தரவுகளை சேகரித்துக் கொண்டு அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டினை அளிக்கலாம் என கூறியுள்ள நிலையில் இதுவரை அடுத்தவர்கள் மீது பழி போட்டு தப்பித்து வரும் திமுக அரசு பெரும் துரோகம் இழைப்பதாகவும், கணக்கெடுப்பை நடத்த எந்தவித முயற்சியும் எடுக்காதது இந்த வன்னியர் சமூக இனத்திற்கு துரோகம் செய்வதாக தெரிவித்தார்.

மேலும் வன்னியர் சமூகத்திற்கு தேவையான பதினைந்து சதவீத இட ஒதுக்கீட்டினை உடனடியாக செயல்படுத்தினால் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தவித நிபந்தனை இன்றி திமுகவிற்கு ஆதரவு அளிக்க தயாராகவும் எந்த ஒரு எம்எல்ஏ சீட்டும் தேவையில்லை எங்களுக்கு என பகிரங்கமாக கூட்டத்தில் தெரிவித்தார்.

வன்னிய இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு அதுவே போதும் எனவும் தெரிவித்தார்.

கொட்டும் மழையிலும் தொடர்ந்து கூட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஈடுபட்டார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்தி கமலாம்பாள் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top