Close
டிசம்பர் 25, 2024 4:36 மணி

அரசு தலைமை மருத்துவருக்கே சிகிச்சை.. போலி டாக்டர் அதிரடி கைது

கைது - மாதிரி படம்

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட அங்கநாதவலசை பகுதியில், மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்த அப்துல்லா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அங்கநாதவலசை பகுதியில் போலி மருத்துவம் பார்க்கப்படுவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், தலைமை மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழு சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்தியது.

சோதனையின் போது, பத்தாம் வகுப்புக்கு மேல் கல்வி தொடராத அப்துல்லா, சமூக மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் குறித்த இரண்டரை ஆண்டு படிப்பை முடித்துவிட்டு, சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

தலைமை மருத்துவர் சிவக்குமார், நோயாளியாக நடித்து அப்துல்லாவிடம் சிகிச்சைக்கு சென்றார். அப்துல்லா, அவரை அடையாளம் காணாமல் மருத்துவ ஆலோசனை வழங்க முயன்ற போது, மருத்துவ குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

அப்துல்லாவிடம் இருந்து 2,000 ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், தலைமை மருத்துவர் சிவக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், கிராமிய காவல் நிலையத்தில் அப்துல்லாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கிராமிய போலீசார், அப்துல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top