உசிலம்பட்டி :
உசிலம்பட்டி அருகே அறுந்து கிடந்த மின் வயரின் மூலம் மின்சாரம் தாக்கி, மேய்ச்சலுக்காக சென்ற 3 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புத்தூர் விஐபி நகரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர்,300 ஆடுகளை வைத்து அருகில் உள்ள கண்மாய் மற்றும் தோட்டத்து பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல இன்று புத்தூர் கண்மாய் பகுதியில் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக ஜெயபிரகாஷ் அழைத்துச் சென்ற நிலையில் கண்மாய் பகுதியில் மின் வயர் அறுந்து கீழே விழுந்து கிடப்பதை அறியாமல் அவ்வழியாக சென்ற 3 ஆடுகள் மின்சாரம் க்கி துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயபிரகாஷ், அளித்த தகவலின் பேரில் மின் வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி மின் வயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் ஆடுகளை மீட்டு உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.அறுந்து கிடந்த மின் வயர் மூலம் மின்சாரம் தாக்கி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.