எங்கெல்லாமோ வெளி மாநிலங்களில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை கேள்விப்பட்ட நமக்கு அண்ணாபல்கலைக் கழகத்திலும் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவரும், மாணவியும் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அடையாளம் தெரியாத இரண்டு பேர் அந்த மாணவனை தாக்கி அந்த மாணவனை அங்கிருந்து விரட்டியுள்ளனர். பின்னர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து எந்த புகாரும் இதுவரை அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை வன்கொடுமை செய்த அந்த இரண்டு பேர் யார் என்பது குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றவாளிகளாக கருதப்படும் அந்த இரண்டு பேரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களா அல்லது அங்கு வேலை செய்பவர்களா அல்லது வெளியில் இருந்து வந்த ஆட்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு பல்கலைக்கழக சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் தற்போது பரிசீலித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு இந்த விவகாரத்தை தீவிரமான விஷயமாக எடுத்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் உத்தரவாதம் அளித்துள்ளார்.