Close
ஜனவரி 4, 2025 4:14 காலை

திருவள்ளூர் நகராட்சியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் : நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்..!

திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

திருவள்ளூர் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் அவலம். மழை நீர் கால்வாய் மூலம் கூவம் ஆற்றில் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு துர்நாற்றம் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுளளது. கண்டுகொள்ளாத நகராட்சி.

திருவள்ளூர் மாவட்ட நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் மொத்தம் 550-க்கும் மேற்பட்ட தெருக்களில் வீடு, கடைகள், வணிக வளாகங்கள் என, 13 ஆயிரத்து 500 கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடங்களில் இருந்து நாள்தோறும் 50 லட்சம் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த கழிவு நீர் தெருக்களில் வெளியேற்றுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே முழு சுகாதாரமான நகராட்சியாக மாற்றும் வகையிலும், கழிவு நீரை அகற்ற ரூ.54.79 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், கடந்த 2008-இல் தொடங்கி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவு பெற்றது.

திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் பகுதியில் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது குழாய் மூலம் காக்களூர் ஊராட்சி தேவா நகரில் கட்டப்பட்டு உள்ள கழிவுநீர் சுத்தகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஆனால் இந்தக் கழிவு நீரை சில நேரங்களில் சுத்திகரிப்பு செய்தும் பல நேரங்களில் சுத்திகரிப்பு செய்யாமலும் வெளியேற்றப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் திருவள்ளூர் நகராட்சி 27 வது வார்டு காந்திநகர் பகுதியில் அங்குள்ள ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்றுவதற்காக அப்போதைய கலெக்டர் மழை நீர் கால்வாய் அமைத்தார்.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றும் கழிவு நீரை மழைநீர் கால்வாயில் திறந்து விடுகின்றனர். திறந்தவெளியில் உள்ள கால்வாயில் கழிவு நீர் செய்வதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதாக அப்பகுதி வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ந்து புகார்கள் கொடுத்து வந்தனர். மேலும் பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் அதிகளவில் இருப்பதாலும் அப்பகுதி மக்கள் சிரமத்துடனே அங்கு வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது வெளியேற்றப்படும் கழிவுநீர் கூவம் ஆற்றில் கலந்து செல்கிறது. தற்போது செய்த மழையின் காரணமாக கூவம் ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த கழிவுநீரும் கலந்து செல்வதால் அதிக அளவில் நுரையுடன் காட்சியளிப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அதில் இருந்து வீசும் துர்நாற்றத்தை சுவாசித்தபடியே செல்கின்றனர்.

திருவள்ளூரில் கூவம் ஆற்றில் கலக்கும் கழிவு நீர் செல்லும் வழியில் புட்லூர் அருகே தடுப்பணை கட்டியிருப்பதால் அங்கே தேங்கி நிற்கிறது. இதனால் மணவாள நகர், வெங்கத்தூர் பெரியகுப்பம், ஒண்டிக்குப்பம், பூங்கா நகர், காக்களூர் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் நிலத்தடி நீர் மாசடைந்து குடிப்பதற்கு லாயக்கற்றதாக மாறி வருகிறது.

எனவே மழை நீர் கால்வாயில் கழிவு நீரை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் திறந்தவெளியில் உள்ள மைனர் கால்வாயில் பைப்லைன் அமைத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுத்திகரிக்கப்படும் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை கூவம் ஆற்றில் கலக்காமல் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top