Close
ஜனவரி 9, 2025 9:43 காலை

என்னங்க ஆச்சு இந்திய அணிக்கு..? தொடர் தோல்விகளால் ஓய்வை அறிவிக்கிறாராம் ரோஹித் சர்மா..?!

கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி

நம்ம ரசிகர்கள் எப்போதுமே அடிச்சி ஆடுனா மட்டுமே பாராட்டுவாங்க. தோல்வியடைஞ்சா திட்டுவாங்க. வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம் தானேங்க. இதை ரசிகர்கள்தான் புரிஞ்சிக்கல. நம்ம கேப்டன் ரோஹித் ஷர்மாவும் புரிஞ்சிக்கலன்னா எப்பிடிங்க..?

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் அணியின் கேப்டன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதில் கேப்டன் அப்செட்டாகி இருக்கிறார். அதனால் கேப்டன் ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவிக்க இருப்பதாக தங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்திய அணியில் அவ்வப்போது எழும் சர்ச்சைகளும், வீரர்களின் திடீர் ஓய்வு தொடர்பான சர்ச்சைகளும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் ஆட்டம் மொத்தமாக இருக்கும்போது மூத்த வீரர்களின் ஆட்டம் குறித்து அதிகமாக விவாதத்துக்கு உள்ளாகிறது.

ஒரு காலத்தில் தோனிக்கும் இந்த நிலை ஏற்பட்டது. இப்போது கேப்டன் ரோஹித்தும், கோலியும் பேசுபொருளாகி இருக்கின்றனர். பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலியின் மோசமான ஆட்டம், அவர்களது ஓய்வு குறித்த பேச்சுகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேப்டனாகவும் தொடக்க வீரராகவும் ரோஹித்தின் செயல்பாடுகள் ரசிகர்களை ஏமாற்றத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

2024-25ம் ஆண்டு சீசனில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முன்பு 1999-2000 சீசனில் சச்சின் தலைமையில் தான் டெஸ்ட் தொடரில் இவ்வளவு மோசமான நிலையை சந்தித்தது.

2024ம் ஆண்டு ரோஹித் 26 இன்னிங்ஸ்களில் விளையாடிய நிலையில் அவரது சராசரி 24.7 ஆக உள்ளது. கடைசி 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு டக் அவுட் உட்பட 7 முறை ஒற்றை இலக்க எண்களில் ரோஹித் விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார்.

விராட் கோலி 19 இன்னிங்ஸ்களில் விளையாடி அவரது சராசரி வெறும் 24.52 ஆக உள்ளது. 10 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 417 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்திய அணி தோல்வியை சந்தித்த கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் சராசரி 15 ஆகவும் கோலியின் சராசரி 11 ஆகவும் உள்ளது.

அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது கூட ரோஹித் சர்மாவால் அணிக்கு எந்தவகையிலும் உதவ முடியாத நிலையில் இருந்தார். தொடக்க ஆட்டக்காரராக தொடர்ந்து விளையாட சுப்மன் கில்லை அணியில் சேர்க்காததும், ரோஹித் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைய காரணமாக இருந்தது.

தொடர் தோல்விகளுக்கு பிறகும், ஓப்பனிங் பேட்ஸ்மேனாக நான் தான் இருப்பேன் என்று ரோஹித் சிறுபிள்ளைபோல அடம்பிடித்து இறங்குகிறார். இதனால் அவர் மீது முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சன செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது.

இந்த நிலையில் கோலி கடந்த 9 இன்னிங்ஸ்சிலும் ஒரே மாதிரியாக தனது விக்கெட்டை இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஸ்லிப்பில் ஃபீல்டர் இருப்பது தெரிந்தும் அங்கேயே மீண்டும் மீண்டும் கேட்ச் கொடுக்கிறார் என்று ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் புலம்புகின்றனர்.

அடிச்சா போர், பறந்தா சிக்ஸர் என்று கெத்தா இருந்த கோலி, எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் கதையாக மாறிப்போனார். இப்போது எதிரணியினர் அவர்கள் நினைக்கும் போது கோலியின் விக்கெட்டை எடுத்து விடும் நிலைக்குப் போய்விட்டார்.

கொரோனா காலத்திற்குப் பிறகு கோலியின் ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஸ்டீவ் ஸ்மித் போல கோலியும் நிச்சயம் ‘இருங்க பாய்’ இதோ வந்திட்டேன்னு மீண்டும் ஃபார்முக்கு வந்திடுவார்னு ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

ஆனால், ரோஹித்தின் நிலையோ அப்படி இல்லை. ரோஹித் இல்லையென்றால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க கில் ரெடியாவே இருக்கிறார். கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு போக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்கும். தொடர் தோல்விகள், மோசமான ஃபார்ம் என்று விமர்சனங்களை சந்தித்து வரும் ரோஹித் சர்மா சிட்னி போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

சிட்னி டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இந்திய அணியை வெற்றி பெறச் செய்து, அந்த மகிழ்ச்சியுடன் ரோஹித் விடைபெறுவாரா? அல்லது நம்மக்கு இவ்ளோதான் என்று தோல்வி முகத்துடன் ஓய்வு பெறுவாரா? கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க பாஸ். நம்ம கேப்டன் மீது நம்பிக்கை வைங்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top