Close
ஜனவரி 9, 2025 6:47 மணி

கிராம ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் சாலைமறியல்..!

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்

பொன்னேரி அருகே கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை இழப்பு, வீட்டு வரி, குடிநீர் வரி பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக புகார்.

நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பில் மீஞ்சூர் பிடிஓ அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள தடம்பெரும்பாக்கம் ஊராட்சியினை அதன் அருகே அமைந்துள்ள பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க அறிவிப்பு வெளியிட்டது.

தடம்பெரும்பாக்கம் ஊராட்சியில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

100 நாள் வேலை திட்டத்தை மட்டுமே நம்பி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் திட்டம் பறிபோனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என புகார் தெரிவித்தனர். மேலும் வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, அனுமதி சான்று கட்டணம் போன்றவை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிடுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பெண்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top