Close
ஜனவரி 9, 2025 3:38 மணி

இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு : கன்னியகுமாரியைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்..!

இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான வி. நாராயணன், திருவனந்தபுரத்தின் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சி.யின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். வருகின்ற 14ம் தேதி இஸ்ரோவின் தலைவராக நாராயணன் பொறுப்பேற்கிறார். தொடர்ந்து 2 ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக அவர் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாராயணன் யார்?

இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1984ம் ஆண்டு இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த வி.நாராயணன், கடந்த 40 ஆண்டுகளாக இஸ்ரோவின் பல பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக திருவனந்தபுரம் அடுத்த வலியமாலாவில் இயங்கி வரும் திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

மேலும், இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரியன் ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி எம்.கே 3, சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 போன்ற திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளார். நாராயணன் தலைமையிலான எல்.பி.எஸ்.சி குழு, இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்கு 183 திரவ உந்துவிசை திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கியுள்ளது.

ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவராக வி. நாராயணன் அறியப்படுகிறார். விண்வெளித் துறையில் நாராயணின் பணியைப் பாராட்டி, இஸ்ரோவின் உயரிய பொறுப்பாக கருதப்படும் “Distinguished Scientist” பொறுப்பு வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஐஐடி கரக்பூர் வெள்ளிப் பதக்கமும், இந்திய விண்வெளி மையத்தின் தங்கப் பதக்கமும் பெற்றவர் ஆவார். தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு முன்னதாக பதவி வகித்த, சிவனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், குறிப்பாக அவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top