உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குறை பிரசவத்திலும், எடைக் குறைவாகவும் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து சாதனை படைத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 300 முதல் 500 குழந்தைகள் சுகப் பிரசவம் மூலமாகவும், அறுவை சிகிச்சை மூலமாகவும் பிறந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் 36 வாரங்களில் பிறக்க வேண்டிய குழந்தைகள் குறை பிரசவமாக சுமார் 24 வாரங்களுக்குளாகவே பிறந்த குழந்தைகள் மற்றும் எடை குறைவாக பிறந்த 5 குழந்தைகளுக்கு முதல் தர மருத்துவமனைக்கு இணையாக சிறப்பு சிகிச்சை அளித்து, இக்குழந்தைகளை எடை அதிகமாகவும், ஆரோக்கியமான குழந்தையாகவும் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறல், பால் பருகும் தன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் சூழலில் கங்காரு எனும் முறைப்படி செயற்கை முறையில் வெண்டிலேட்டர் உதவியுடனும், இயற்கை முறையில் தாயின் அரவணைப்பு மூலமும் ஒவ்வொரு நாளும் கண்காணித்து குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் எடை அதிகரிப்பை உறுதி செய்கின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இதே போன்று 800 கிராமில் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து எடையை அதிகரிக்கச் செய்து பெரும் பாராட்டை பெற்ற இந்த மருத்துவ குழுவினர் மீண்டும் 5 பச்சிளம் குழந்தைகளை சிகிச்சை மூலம் மீட்டெடுத்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.