Close
ஜனவரி 9, 2025 5:36 மணி

மீண்டும் சாலையோரத்தில் மருத்துவ கழிவு..! அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்..!

சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்.

தென்காசியில், சாலையின் ஓரமாக கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் – மூட்டை, மூட்டையாக கிடக்கும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம்.

கேரளாவில் உள்ள மருத்துவக் கழிவுகளானது சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டு இருந்த நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள கழிவுகளை அம்மாநில அரசே மீண்டும் அள்ள வேண்டும் எனவும், தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்த நிலையில், கேரள அரசு சுமார் 20 லாரிகளில் 5 லட்சம் டன்களுக்கு மேலாக மருத்துவக் கழிவுகளை திருப்பி அள்ளி சென்ற நிலையில், இது போன்ற மருத்துவ கழிவுகள் இனிமேல் தமிழகத்திற்குள் கொண்டு வரப்படாத வண்ணம் தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழக -கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை பகுதியில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது அதிர்ச்சியூட்டும் சம்பவமாக மீண்டும் மருத்துவ கழிவுகளானது தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் இருந்து ஆய்க்குடி செல்லும் மங்கம்மா சாலையில் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது தற்போது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த மருத்துவக் கழிவுகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன? இந்த பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி சென்ற நபர்கள் யார்? இது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்ட கழிவுகளா? அல்லது இங்கு உள்ள கழிவுகளா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top