தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பங்களாதேஷ் வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்ற தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேபி இணைந்து நடத்திய தென் கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசார நிறைவு விழா பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு ஆலவயல் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா சக்திவேல் தலைமை வகித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் பேசுகையில், தென்கிழக்கு ஆசிய கரும்பேன் மிளகாய் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த பாதிப்பால் 80 சதவிகிதம் வரை இழப்பீடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வருமுன் காப்போம் நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமங்களில் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் எவ்வாறு கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்வது என்பது பற்றியும் விளக்கி கூறப்பட்டது. இப்பிரசாரம் 15,000 விவசாயிகளை சென்றடைந்துள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பங்களாதேஷ் முக்கிய வேளாண்மை அலுவலர்கள் முகம்மது சவுக்கத் மஜும்தர் மற்றும் ஏ.பி.எம்.ரகீபுல் ஹசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் முகம்மது சவுக்கத் மஜும்தர் பேசியதாவது: முதன்முறையாக விவசாயத்தில் ஏற்படும் பூச்சி பாதிப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பர வாகனத்தை பயன்படுத்துவதைப் இங்குதான் பார்க்கின்றோம். இது மிகவும் புதுமையான அணுகுமுறையாக உள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பல்வேறு வேளாண் விரிவாக்க யுத்திகள் எங்களுக்கு நல்ல படிப்பினையாக உள்ளது.இந்த யுத்திகளை எங்களது நாட்டில் பயன்படுத்துவோம் என்றார்.
கேபி தெற்கு ஆசியா இயக்குநர் வினோத் பண்டிட் விழிப்புணர்வு பிரசார நிறைவு செய்து பேசுகையில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் கேபியும் இணைந்து விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவைகள் விவசாயிகள் விளைச்சல் மற்றும் வருமானத்தை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும் எனக்குறிப்பிட்டார்.
கேபி உலக அளவிலான கேபி டிஜிட்டல் கருவிகள் ஒருங்கிணைப்பாளர் மாளவிகா சவுத்ரி, கிட்ட ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா கண்ணா ஆகியோர் பிரசார நோக்கங்களைப் பற்றி விளக்கிப் பேசினர். நிகழ்ச்சியில் வேளாண் உதவி அலுவலர்கள் ஏ.அமளி ஜாஸ்மின், எம்.கற்பகம், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் புவியரசு, பிரபஞ்சம் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.நாராயணசாமி ராஜ்,
பொன்னமராவதி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி பி.மணிகண்டன, பயிர் மருத்துவர்கள் பி.செந்தில்குமார் ஆகியோர் உரை நிகழ்த்தினர். ஏற்பாடுகளை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் ஆர் வினோத் கண்ணா மற்றும் கேஸ் பிரிட்டோ ஆகியோர் செய்தனர். முன்னதாக பயிர் மருத்துவர் கே பாரதிதாசன் வரவேற்றார். கள அலுவலர் டி. விமலா நன்றி கூறினார்