Close
ஜனவரி 11, 2025 3:52 மணி

எருமப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தை கலெக்டர் ஆய்வு..!

எருமப்பட்டி அருகே பொன்னேரியில், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்:

எருமப்பட்டி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகில் உள்ள பொன்னேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு மைதானத்தை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும், ஜல்லிக்கட்டு குழுவினரும் மேற்கொள்ள வேண்டும். போட்டி நடத்துவதற்கான தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் கேலரி, மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித் துறையினர் ஆய்வுசெய்து தகுதிச்சான்று வழங்க வேண்டும்.

அமரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
கால்நடை பராமரிப்புத் துறை டாக்டர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி சான்றளிக்கவும், மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.

காளைகள் போட்டியின்போது காயமுற்றால் அவைகளுக்கு சிகிச்சை அளிக்க விளையாட்டுத் திடல் அருகில் போதுமான மருந்துகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், வாடிவாசல் மற்றும் காளைகள் ஓடுதளம், காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வரும் வழி, மருத்துவ குழுவினரின் இருப்பிடம் மற்றும் பார்வையாளர்களின் மாடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து, குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

ஆய்வின்போது நாமக்கல் ஆர்டிஓ பார்தீபன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், சேந்தமங்கலம் தாசில்தார் வெங்கடேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top