Close
ஜனவரி 22, 2025 7:17 மணி

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நிறைவுற்றது..! கார், டிராக்டர் பரிசு..!

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு

மதுரை :

20 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பூவந்தி அபிசித்தருக்கு கார் பரிசு மற்றும் சிறந்த காளையான சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் பாகுபலி காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

2 ஆவது முறையாக அலங்காநல்லூரில் முதல் பரிசை வென்ற பூவந்தி அபிசித்தர்.

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 9 சுற்றுக்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் 1000 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் களம்கண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

போட்டியில் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களை சிதறடித்து காளைகளே அதிகளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளிச் சென்றது.

முதல் பரிசு கார் வென்ற அபிசித்தர்

போட்டியின் முடிவில் 20 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் மதிப்பிலான ஒரு நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தை பிடித்த பொதும்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற மாடுபிடி வீரருக்கு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது .

மூன்றாம் பரிசாக 10 காளைகளை அடக்கிய சிவகங்கை மடப்புரம் விக்னேஷ் என்ற மாடுபிடி வீரருக்கு ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் பரிசாக வழங்கப்பட்டது. நான்காம் பரிசாக 9 காளைகளை அடக்கிய
ஏனாதி பகுதியை சேர்ந்த அஜய் என்ற மாடுபிடி வீரருக்கு TVS xl பைக் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோன்று களத்தில் சிறப்பாக விளையாடிய சேலம் அயோத்தியாபட்டிணம் பாகுபலி பிரதர்ஸ் என்ற காளை உரிமையாளருக்கு 11 லட்சம் மதிப்பிலான டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. கூடுதலாக அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை சார்பாக கன்றுடன் கூடிய கறவை பசு வழங்கப்பட்டது

இரண்டாவது காளைக்கு எரக்கநாயக்கனூர் சேர்ந்த வக்கீல் பார்த்தசாரதி காளைக்கு மோட்டார் பைக்கும். கூடுதலாக விவசாய இயந்திரம் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக புதுக்கோட்டை கண்ணன் என்பவரின் காளைக்கு எலக்ட்ரிக் பைக் பரிசும், நான்காம் பரிசாக இலங்கை செந்தில் தொண்டைமான் வழங்கிய
மோட்டார் பைக் பரிசாக வழங்கப்பட்டது

மாடு குத்தியதில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் காவல்துறையினர் என 76 பேர் காயமடைந்தனர்.

மாடு சேகரிக்கும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரியசாமி (வயது 66) என்ற முதியவரை காளை மாடு கழுத்தில் குத்தியதால் பலத்த காயமடைந்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த போட்டியினை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கைதட்டி ஆராவாரத்துடன் உற்சாகமாக பார்வையிட்டனர்.

போட்டியில் கலந்துகொண்ட அனைத்து காளைக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது, போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயம், பீரோ, கட்டில்,டிவி, சைக்கிள், பணம், சேர், உள்ளிட்ட ஏராளமான பரிசுபொருட்கள் வழங்கப்பட்டது.

போட்டியில் அதிகளவிற்கு பெண்கள் மற்றும் திருநங்கைகளால் வளர்க்கப்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட நிலையில் வெற்றிபெற்று பரிசுகளை தட்டிச்சென்றது.

இதேபோன்று காவல்துறையினர் சார்பில் அவிழ்க்கப்பட்ட காளைகளும் பரிசுகளை தட்டிச்சென்றது.
இந்த ஆண்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பெரும்பாலும் காளைகளே அதிகளவிற்கு வெற்றிபெற்று பரிசுகளை தட்டிச்சென்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top