Close
ஜனவரி 22, 2025 8:38 மணி

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் நிஜமா? நாடகமா?

ஓராண்டுக்கு மேல் நடக்கும் இஸ்ரேல் ஹமாஸ் போர் இப்போது ஒரு முடிவினை எட்டுகின்றது.

ஆனால் இது சில நாள் அமைதி மட்டுமே. இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானது மட்டுமே. இப்போது ஜோபிடன் விடைபெறும் நேரம். அவர் ஒரு சாதனையுடன் கூடிய ஓய்வினை எதிர்பார்க்கின்றார். ஒரு போரை நிறுத்திய சாதனையுடன் அவர் பதவி இறங்க முடிவெடுத்து விட்டார்.

இஸ்ரேலுக்கு ஹமாஸ் போரில் இயல்பான உதவிகளைத்தான் ஜோ பைடன் செய்தார். இஸ்ரேல் எதிர்பார்த்த பெரும் ஆதரவு இரான் மேலான தாக்குதலுக்கு அனுமதி என எதுவும் கொடுக்கவில்லை. பைடன் காலத்தில் அமெரிக்க இஸ்ரேல் உறவு முழுக்க இனிமை அல்ல, கசப்பு ஏராளம் இருந்தது.

ஆனாலும் இஸ்ரேல் பொறுத்துக் கொண்டது. என்ன தான் முழுக்க அடிவாங்கினாலும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் தான் சில பாலஸ்தீன பகுதிகள் இன்னமும் உள்ளது. ஹமாஸை முழுக்க முடிக்க பிடன் அனுமதிக்கவில்லை.

ஆனால் அடுத்து டிரம்ப் வருகின்றார் என்றதும் இஸ்ரேலுக்கு கொண்டாட்டமும் ஹமாஸுக்கு திண்டாட்டமும் ஏற்பட்டது. இதனால் டிரம்ப் வரும்முன் ஒரு ஒப்பந்தம் செய்து விட்டால் அது பாதுகாப்பானது என அடிவாங்கி வீங்கி கிடக்கும் ஹமாஸ் நினைக்கிறது.

அதன்படி ஒப்பந்தம் தயாராகி விட்டது. எகிப்து அல்லது கத்தார் ஊடாக இது நடந்திருக்கலாம். ஒப்பந்தபடி முதல் ஆறுவாரம் போர் நிறுத்தப்படும். அப்போது ஹமாஸ் 33 பணய கைதிகளை விடுவிக்கும். இஸ்ரேல் சில பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும்.

பின் இஸ்ரேல் காசாவினை விட்டு வெளியேறி இனி வரமாட்டோம் என உறுதிதரவேண்டும். அப்போது மீதி கைதிகள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைப்பார்கள். இது ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேலும் சொல்கின்றது. ஜோபிடன் வெற்றி வெற்றி என சொல்லி வெளியேறிய பின் நிலைமை என்னாகும். அடுத்த 4 நாட்களில் என்னாகும் என்றால் தலைகீழாக மாறும்.

இஸ்ரேலை பொறுத்தவரை இப்போது எதையும் கேட்டுக் கொள்ளும் தான். இன்னும் நான்கே  நாள்தான் என்பது அது அறிந்தது. ஆக நேற்று முதல் 42 நாள் அமைதி அறிவிக்கபட்டிருக்கின்றது. ஹமாஸ் தான் சொன்னபடி தீவிரவாதிகளை விடுவிக்க முடியுமா என்பது சந்தேகம். காரணம் பலர் இறந்திருக்கலாம். இன்னொன்று கடத்திய இயக்கத்தில் ஹமாஸ் தவிர இன்னும் சில உண்டு. அவைகள் தங்களிடம் உள்ள கைதிகளை தராது. காரணம் இப்பொது அவர்கள் கைதிகள் அல்ல. அந்த இயக்கங்களுக்கு கிடைத்த வைரமூட்டைகள்.

இப்படி ஹமாஸுக்கும் சிக்கல் இருந்தாலும் டிரம்ப் வரும்முன் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என வந்திருக்கின்றது. இஸ்ரேலோ டிரம்ப் நம்மவர் என புன்னகைக்கின்றது. எல்லாம் நல்லபடியாக நடந்து அமைதி திரும்பினால் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனால் நடக்குமா என்பது தெரியவில்லை.

ஆக “என் பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல” என சொல்லாமல் சொல்லி புன்னகைக்கின்றார் டிரம்ப், இனி நாலு வருடங்கள் அந்த பெயர் தான் பலரை மிரட்டிக் கொண்டே இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top