Close
ஜனவரி 22, 2025 12:59 மணி

முல்லைப் பெரியாறுக்காக குமுளி ஜன., 25ல் முற்றுகை..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விடயத்தில், மத்திய அரசு நியமித்த குழுவை ஏற்றுக் கொள்ள முடியாது என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது உடைத்து, அழித்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கேரள மாநில அரசும், இயக்கங்களும், கட்சிகளும் தொடர்ந்து வேலை செய்து வருகின்றன.

ஆனாலும் அணை அருகே அவர்களால் நெருங்க முடியவில்லை. அதற்கு காரணமாக இருந்தது, கடந்த 2006 ஆம் ஆண்டு, பிப்ரவரி 27-2006 ல் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு, மற்றும் 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இரண்டாவது தீர்ப்பு.

இந்த இரண்டு தீர்ப்புகளையும் தகர்க்கும் விதமாக, தொடர்ந்து கேரள மாநில அரசும், இயக்கங்களும், கட்சிகளும் வேலை செய்து வருகிறது. நாமும் நம்முடைய பங்குக்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் கேரளா விடுவதாக இல்லை.

கடந்த 2000 மாவது ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு, பல்வேறு வடிவங்களோடு, அணையை கண்காணித்து வரும் நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது.

இந்த தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விடயத்தில் தலையிட வேண்டும் என்று, கேரளாவைச் சேர்ந்த மேத்யூ நெடும்பரா உள்ளிட்ட 5 வழக்கறிஞர்கள் போட்ட வழக்கு, கடத்த ஜனவரி 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தேசிய அளவிலான நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியது.

உடனடியாக களத்திற்கு வந்த மத்திய ஜல் சக்தி துறை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான அனில் ஜெயின் தலைமையில்,7  பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழகத்தின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர்  மணிவாசகன், காவிரி  தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரோடு கேரளாவைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் நீர்ப்பாசனத்துறை செயலாளர் ஆகிய இருவரையும் இணைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய ஜல் சக்தி துறை.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், கேரளாவைச் சேர்ந்த நீதியரசர் கே சி தாமஸ் இணைக்கப்பட்டிருந்தாலும், அவரை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. காரணம் முல்லைப் பெரியாறு அணை குறித்த அவருடைய புரிதல் அபாரமானது. அதனால் அவரது நியமனத்தை நாங்கள் ஏற்கவே செய்தோம்.

ஆனால் தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் இருவரும், ஆரம்பம் முதல் இன்று வரை முல்லைப் பெரியாறு அணைக்கும், அதன் உறுதித் தன்மைக்கும் எதிரானவர்கள். கூடுதலாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதி, நீர்ப்பிடிப்பு பகுதி எல்லாம் எங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றிற்கு  நாங்கள் முப்பது ரூபாய் வரி கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், எந்த அடிப்படையில் கேரளாவை சேர்ந்தவர்களை நியமனம் செய்தது மத்திய ஜல் சக்தி துறை என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையை, தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த போதே, அதனை நாங்கள் எதிர்த்தோம், போராடினோம், வழக்குகளை வாங்கினோம்.

இப்போது எங்களுடைய உச்சந்தலையில் இடியை இறக்கும் விதமாக, கேரளாவைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளரையும், நீர்ப்பாசனத்தை செயலாளரையும் இதில் இணைத்ததன் மூலம் எங்களை முற்று முழுதாக ஒழித்துக் கட்ட நினைக்கிறது மத்திய ஜல்சக்தி துறை.

எந்த உச்ச நீதிமன்றம் கடந்த 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை மீதான நம்பகத்தன்மையை வெளிப்படுத்தி தீர்ப்பு வழங்கியதோ, அந்த தீர்ப்பையே சந்தேகத்திற்குரியது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள் மேத்யூ நெடும்பரா மற்றும் அவருடன் சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள். இவர்களுடைய இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் எப்படி அனுமதித்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

கேரள சட்டமன்ற சபாநாயகர் ஜாஜி பி ஜோசப், இந்தக் குழுவை வரவேற்று இருப்பதோடு, முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியில் வாழும் மக்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றதோடு, புதிய குழு அணையின் பாதுகாப்பு மதிப்பீட்டை சர்வதேச நிறுவனம் மூலம் ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன்  குரியா கோஸ் ஒரு படி மேலே போய், புதிய குழு நியமனம் கேரளாவிற்கு பெருத்த நிம்மதியை கொடுத்திருப்பதாகவும், புதிய குழு முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்’ என்று நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.

தமிழகத்திலிருந்து அத்தனை அடிப்படை பொருட்களையும் பெற்றுக் கொண்டிருக்கும் கேரளா, இத்தனை விஷமத்தனமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் உயிர்நாடியாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணை மீது கை வைக்க நினைப்பது, தேன்கூட்டை கலைப்பதற்கு சமம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

வரும் ஜனவரி 25 ம் தேதி, காலை 10 மணிக்கு,குமுளி எல்லையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கூட்டிணைப்பில், அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்களை இணைத்து, மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த தயாராகி வருகிறோம்.

உடனடியாக மத்திய ஜல் சக்தி துறை புதிய குழுவில் இடம் பெற்றிருக்கும் கேரள மாநில செயலாளர்களை நீக்கம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் 12 வழிகளையும் முற்றுகையிடும் முயற்சியில் ஈடுபடுவோம்.

கூடுதலாக 1956 மொழிவழி பிரிவினையின் போது, தந்திரமாக கேரளாவால் எங்களிடமிருந்து திருடப்பட்ட 1400 சதுர km பரப்பை திரும்ப பெறுவதற்கான போராட்டத்தை தமிழக முழுவதும் விரிவு படுத்துவோம். போராட்டம் தொடரும்… இவ்வாறு கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top