படிப்புக்கு இணையாக விளையாட்டுத்துறையிலும் உச்சம் தொட்டு வாழ்வில் வெற்றி பெறலாம் என முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவில் தென்னிந்திய தலைவர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.
டி ஸ்கொயர் பவுண்டேசன் சார்பில் தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள ஆர்மி கிரிக்கெட் கிரவுண்டில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு தேசிய முன்னாள் ராணுவவீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் தென்னிந்திய தலைவர் மகாராஜன், தேனி மாவட்ட தலைவர் மணி, முன்னாள் தலைவர் மணி, தேனி மாவட்ட ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் முக்கிய பிரமுகர் துர்க்கநாதன், லட்சுமிபுரம் எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேனேஜர் சுரேஷ் பரிசுகளை வழங்கினர்.
முன்னாள் ராணுவவீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் தென்னிந்திய தலைவர் மகாராஜன் பேசியதாவது: வாழ்வில் படிப்பு மிக, மிக முக்கியம். படிப்புக்கு இணையாக திறமை, ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ள விளையாட்டு முக்கியம். விளையாடும் போது உடல் வலிமை, மனவலிமை கிடைக்கும். ஒழுக்கமும், குழு மனப்பான்மையும், ஒருவருக்கு ஒருவர் உதவும் நல்லொழுக்கமும், தானாக மேம்படும்.
விளையாட்டு முடிந்த பின்னர், விளையாடிய விதம், மேலும் விளையாட வேண்டிய விதம் குறித்து விளையாட்டு வீரர்கள் தங்களுக்குள் கலந்துரையாடல் நடத்த வேண்டும். இதன் மூலம் அளவற்ற அற்புதமான ஒரு ஒருங்கிணைப்பு மனப்பக்குவம் வளரும். இந்த சூழலை விளையாட்டு தவிர வேறு எதுவும் வழங்கவே முடியாது. விளையாட்டுத்துறையில் உலக அளவில் சாதிக்க முடியும். பலர் வெற்றி பெற்று வழிகாட்டுதல்களாக நமக்கு முன்பே வாழ்ந்து கொண்டுள்ளனர்.
விளையாட்டு மைதானம் ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கும் போது, உடல், மன ஆரோக்கியம், தனிமனித ஒழுக்கம், நாகரீகம், பண்பாடு அத்தனையும் மேம்படும். எனவே படிப்புக்கு இணையாக மாணவ, மாணவிகள் விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் விளையாட்டுத்துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. விளையாட்டுக்காக அரசு பல்வேறு வகைகளில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து வருகிறது.
இதனை அத்தனை மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை இல்லாத அளவு விளையாட்டு வீரர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவு கிடைத்து வருவதை நாங்கள் நேரில் காண்கிறோம். இதன் மூலம் இந்தியாவின் விளையாட்டுத்துறைக்கு உலக அளவில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளதை நாங்கள் கண்கூடாக பார்த்து வருகிறோம். விளையாட்டை ஊக்கப்படுத்தும் பெற்றோர்களை பாராட்டியே ஆக வேண்டும். இவ்வாறு பேசினார்.
மாவட்ட தலைவர் மணி பேசும் போது, விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறை பணிகளில் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாதுகாப்புத்துறை, சீருடை பணித்துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு வழங்கப்படுகிறது. இந்த வாழ்வியல் வேலை வாய்ப்புகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.