சிவகங்கை:
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை எவ்வித இடையூறுன்றி சிறப்பாக தமிழகத்தில் நடத்திட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், கண்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி இன்றையதினம் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவில், பங்கேற்பதற்கென அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, பல்வேறுப் பகுதிகளிலிருந்து 150 காளைகளும், 50 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இப்பணியில் 10 மருத்துவக் குழுக்களும், காவல் துறையைச் சார்ந்த சுமார் 700 காவலர்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவ்விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வரும் கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழுவினைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் வாழ்த்தினார்.
முன்னதாக, கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், மாடுபிடி வீரர்கள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) இராமசந்திரன், காளையார்கோவில் வட்டாட்சியர் முபாரக், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.