Close
பிப்ரவரி 2, 2025 6:46 காலை

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை : தேசிய வனஉயிரின வாரியம் அனுமதி..!

சிலந்தி ஆறு அணைக் கட்டும் பணி

கேரளாவில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு, தேசிய வன உயிரின வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில் இடுக்கி மாவட்டம் வட்டவாடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டி வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், தமிழகத்தில் பாயும் அமராவதி ஆறு மற்றும் அணைக்கு நீர் வரத்து பாதிக்கும். இதனால், அமராவதி ஆற்றின் மூலம் பயன்பெறும் பாசனம், குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

விவசாயிகளும் கேரளாவின் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வரும் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதி தன் ஆட்சேபத்தை தெரிவித்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், இரு மாநிலங்கள் தொடர்புடைய ஆறு என்பதால், தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொண்டு அணை கட்டுமாறு கேரளாவுக்கு உத்தரவிட்டது.

பசுமை தீர்ப்பாயத்தில் பதில் தாக்கல் செய்த கேரளா, 45 மீட்டர் நீளத்தில் ஒரு மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டுவதாகவும், இது பாம்பாறு உப வடிநிலத்தில் தங்கள் மாநிலத்துக்கு உள்ளூர் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 0.02 டி.எம்.சி., என்ற அளவுக்கு உட்பட்டது தான் என்றும் வாதிட்டது.

இது அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் ஒரு பகுதி என்றும், இதன் மூலம் 617 குடும்பத்தினருக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றும் கேரளா தன் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தான், கேரளாவின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தேசிய வன விலங்கு வாரியம், சிலந்தி ஆற்றில் அணை கட்ட அனுமதி வழங்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top