Close
ஜனவரி 22, 2025 7:19 மணி

துணைத் தலைவர் பதவியை விட்டுகொடுக்காததால் ஆத்திரம் : மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவர் கொலை..! 3 பேருக்கு ஆயுள்..!

Crime

-கோப்பு படம்

நாமக்கல்:

மனைவிக்கு துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத ஆத்திரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த வழக்கில். 2 பேருக்கு நாமக்கல் கோர்ட்டில் 3 ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே இருக்கூர் பஞ்சாயத்து, சுப்பையாபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (35), செந்தில்குமார் (42), தூய்மைப் பணியாளர் சரவணன் (44) ஆகிய 4 பேரும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி இருக்கூர் பஞ்சாயத்து ஆபீஸ் அருகில் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் 4 பேரும் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அன்று இரவுதியாகராஜன் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவருக்கு மட்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிட் கலந்த மதுவை தியாகராஜன், செந்தில்குமாரும் குடித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், கடந்த 2019ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது இருக்கூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவியை தனது மனைவிக்கு விட்டுக் கொடுக்காதாதல் செந்தில்குமாருக்கு ஆசிட் கலந்த மதுவை ஆறுமுகம் கொடுத்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இம்மதுவை செந்தில்குமாருடன் வந்த தியாகராஜனும் குடித்ததால் அவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது உள்ளிட்ட விவரங்கள் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஆறுமுகம் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட இருக்கூர் பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர் சரவணன் (44) ஆகிய இருவரையும் பரமத்தி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று அதன் மீது நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார். அதில், ஆறுமுகம், சரவணன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top