8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எப்போது நடைமுறை படுத்த வாய்ப்பு உள்ளது?
மத்திய அரசு 31.01.2025 ஆம் தேதிக்குள் ஊதியக் குழு தலைவர், ஊதியக் குழு பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய கால அளவு பற்றிய அரசாணை வெளியிடும்.
இதன் பிறகு ஊதியக் குழு, மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டு, பல்வேறு தரவுகள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு, மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களின் கருத்தையும் கேட்டு, கடந்த 10 ஆண்டுகளில் அத்தியாவசிய நுகர்வு பொருள்களின் விலை உயர்வு மற்றும் அரசின் நிதி நிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வு வழங்கலாம் என பரிந்துரை செய்து, ஊதிய நிர்ணய காரணியை இறுதி செய்து, அரசுக்கு அறிக்கையாக அளிக்கும். ஊதிய உயர்வு 15% முதல் 20% வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
Fitment factor 1.86 முதல் 2.28 க்குள் இருக்கலாம் என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கணிப்பு கணக்கீடுகள் மூலம் தெரிய வருகிறது. இந்த நடைமுறைகள் முடிய, 2026 ஜூன் மாதம் ஆகலாம். இந்த பரிந்துரைகளை அரசு ஆய்வு செய்து, அமைச்சரவை ஒப்புதல் பெற்று 2026 ஜூலையில் அரசாணை வெளியிடப்படலாம். 2026 ஜனவரி முதல் ஜூன் வரை நிலுவைத் தொகையாகவும், 2026 ஜூலை முதல் ஊதியத்துடனும் ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறை படுத்தப் பட வாய்ப்பு அதிகம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 2026 மே மாதம் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சி பொறுப்பேற்கும். அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழகத்தில் நடைமுறை படுத்த அரசிடம் கோரிக்கை வைப்பார்கள்.
இந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 8 வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்துவது சார்பான குழு ஒன்றை அமைக்கும். இந்தக் குழு 8வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் உள்ள நிதி நிலைக்கு ஏற்ற, பல்வேறு தரவுகளின் அடிப்படையிலும் ஆய்வுகள் மேற்கொண்டு , 8 வது ஊதியக் குழு நடைமுறை படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
இதற்கு தோராயமாக 2027 டிசம்பர் மாதம் வரை ஆகலாம். இந்த அறிக்கையின் அடிப்படையில், 2028 பிப்ரவரி மாதம் அதாவது 2028-29 ஆம் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகலாம்.
2026, 2027 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு (24 மாதங்கள்) நிலுவைத் தொகை வழங்கப்படுமா? என்பது அப்போதைய நிதிநிலையை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்.
ஆகவே, தமிழக அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழு பணப்பலன்களை பெற, 2028 பிப்ரவரி வரை காத்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.