மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை, திருச்சிராப்பள்ளி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் டைடல் பார்க் நிறுவனம், சென்னை, தரமணி, பட்டாபிராம், கோயம்புத்தூரை தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியில் டைடல் பூங்கா அமைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
திருச்சிராப்பள்ளியில் திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பஸ்நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த பூங்கா அமைகிறது. தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமைய உள்ளது.
அதேபோல், மதுரையில் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி தரை மற்றும் 12 தளங்களுடன் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பார்க்கில் 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், இந்த இரண்டு டைடல் பூங்கா பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.
இந்நிலையில் அதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தற்போது சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.