உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே மயானத்திற்கு செல்ல இரயில்வே பாதையின் குறுக்கே பாலம் இல்லாததால், இறந்தவர் உடலுடன் ஆபத்தான முறையில் இரயில் பாதையை கடந்து செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டி கிராமத்தில் 300 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக் கிராமத்தின் மயானத்திற்கு செல்ல மதுரை போடி இரயில்பாதையை கடந்து செல்லும் நிலை உள்ளது.
அகல இரயில்பாதையாக மாற்றியமைக்கும் போது, மயானத்திற்கு செல்ல பாலம் அமைத்து தர இக்கிராம மக்கள் கோரிக்கை வைத்த சூழலில், பாலம் அமைக்காமல் இரயில்பாதை அமைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டிற்கும் வந்துள்ளது.
இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராம மக்கள் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு ஆபத்தான முறையில் இரயில் பாதையை கடந்து எடுத்து சென்று மயானத்தில் நல்லடக்கம் செய்வது தொடர்கதையாக உள்ளது.
இன்று வழக்கம் போல் இதே ஊரைச் சேர்ந்த வெள்ளத்தாய் என்ற பெண்மணி உடல்நல குறைவு காரணமாக உயிரிழக்க இவரது உடலையும், ஆபத்தான முறையில் இரயில்பாதையை கடந்து மயானத்திற்கு எடுத்து சென்றனர்.
இது குறித்து, பலமுறை இரயில்வே துறையினரிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லாத சூழலில், விரைவில் உரிய நிரந்தர தீர்வாக பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.