காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் செவிலிமேடு ராமானுஜர் சன்னதியில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் ஸ்ரீ ராமானுஜருக்கு, வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி தாயாரும் வேடர் திருக்கோலத்தில் காட்சியளித்த வரலாற்று நிகழ்வினை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பெருமாள் வேடர் திருக்கோலத்தில் செவிலிமேடு பகுதியில் இந் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
வைகுண்ட ஏகாதசியில் இருந்து பன்னிரண்டாவது நாள் நடைபெறும் இந்நிகழ்வில், பெருமாள் பல்லக்கில் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக செவிலிமேட்டு ராமானுஜர் திருக்கோயிலுக்கு வருகை புரிந்தார்.
வழிநெடுகிலும் பெருமாளுக்கு பக்தர்கள் தீபஆராதனை செய்து இறையருள் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து திருக்கோயிலுக்கு வந்த வரதராஜரை, ராமானுஜர் வரவேற்று சாலை கிணறில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
சிறப்பு திருமஞ்சனத்திற்கு பிறகு ஸ்ரீதேவி பூதேவியுடன் வில் அம்புடன் வேடர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பெருமாள் தேசிகர் சன்னதிக்கு சென்று மாலை மாற்றுதல் வைபவம், அடுத்து வரதராஜ கோயில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள ராமானுஜர் வாழ்ந்த இல்லத்துக்கு சென்று மண்டகபடி நடைபெறுவது என பல நிகழ்வுகள் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன் அறுசுவை விருந்து அன்னதானமாக வழங்கினார்.