நாமக்கல் :
மோகனூர் டவுன் பஞ்சாயத்துடன், குமரிபாளையம், பேட்டப்பாளையம், ராசிபாளையம், மணப்பள்ளி ஆகிய, 4 கிராம பஞ்சாயத்துக்களை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில், கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், மோகனூர் டவுன் பஞ்சாயத்து மற்றும் குமரிபாளையம், பேட்டப்பாளையம், ராசிபாளையம், மணப்பள்ளி ஆகிய 4 கிராம பஞ்சாயத்துகளை இணைத்து, மோகனூர் நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூன்றாண்டு சராசரி வருமானமும், மக்கள் தொகையும் பின்வருமாறு:
மோகனூர் டவுன் பஞ்சாயத்து 3 ஆண்டு வருமானம் ரூ. 8 கோடியே 40 லட்சத்து 47,000, மக்கள் தொகை 14,315, குமரிபாளையம் பஞ்சாயத்து வருமானம் ரூ. 4.21 லட்சம், மக்கள் தொகை 4,316, பேட்டப்பாளையம் பஞ்சாயத்து வருமானம் ரூ. 9.11 லட்சம், மக்கள் தொகை 3,066.
ராசிபாளையம் பஞ்சாயத்து வருமானம் ரூ. 9.16 லட்சம், மக்கள் தொகை 2,916, மணப்பள்ளி பஞ்சாயத்து வருமானம் ரூ. 13.03 லட்சம், மக்கள் தொகை 5,940.
டவுன் பஞ்சாயத்துடன் கிராம பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மோகனுனூர் கலையரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி ராமதாஸ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில், பேட்டப்பாளையம், மணப்பள்ளி, குமரிபாளையம், ராசிபாளையம் பஞ்சாயத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
அப்போது அங்கு வந்த, மோகனூர் தாசில்தார் மணிகண்டன், பி.டி.ஓ. கீதா, இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் ஆகியோரிடம், நகராட்சியாக தரம் உயர்த்தும்போது, சொத்து வரி, குடிநீர் கட்டணம், வீட்டு வரி உள்ளிட்டவை அதிகரிக்கும். 100 நாள் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். இதில் பணியாற்றுபவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
அவற்றை நம்பி பல குடும்பங்கள் ஜீவனம் நடத்துகின்றன. அதனால், கிராம பஞ்சாயத்தாகவே நீடிக்க அனுமதிக்க வேண்டும் என கூறினர். தொடர்ந்து, உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். அரசுக்கு முறைப்படி அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.